சென்னை
அத்திப்பட்டில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் கொதிகலனில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
சென்னை புறநகரான மீஞ்சூர் அருகில் உள்ளது அத்திப்பட்டு. இங்கு வடசென்னை அனல் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகின்றது. இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது.
முதல் நிலையில் உள்ள மூன்றாவது அலகின் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அலகில் உற்பத்தி ஆகும் 210 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பழுதை நீக்கும் பணியில் அனல் மின்நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பணி முடிந்த பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிய வந்துள்ளது.
இந்த பழுது காரணமாக மின் உற்பத்தி தடை பட்டுள்ளதால் சென்னையின் புற்நகர் பகுதிகளில் மின் தடை உண்டாகலாம் என கூறப்படுகிறது.