இந்தியர்களுக்கும், தாயகத்திலிருந்து வந்த சீனர்களுக்கும் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
இன்று பல நாடுகளில் கடுமையான இனக்கலவரங்கள் பகிரங்கமாக நடந்துவரும் வேளையில், சிங்கப்பூர் சமூக நல்லிணக்கம் மிக்க ஒரு நாடாக போறறப்பட்டு வருகிறது. நான்கு வேறுபட்ட இனங்கள் சேர்ந்து வாழும் சூழலில் சமூக நல்லிணக்கத்தை அந்நாட்டின் அரசு கண்ணும் கருத்துமாக பேணிகாத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவ்வப்போது சில பிரச்சனைகளும் தலைதூக்குவதுண்டு. அப்படித்தான் இப்போது இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் வாடகைக்கு வீடு கிடைக்கும் பிரச்சனை தலைதூக்கியிருக்கிறது.
வீட்டை வாடகைக்கு விடும் சிங்கப்பூர்வாசிகளில் பலர் “இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் வீடு இல்லை” என்று பகிரங்கமாகவே தங்கள் விளம்பரங்களில் குறிப்பிடுவது அரசுக்கு தலைவலியை உண்டாக்கியிருக்கிறது.
இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் சிங்கப்பூருக்கு வந்து குடியேறுபவர்கள் பல நேரங்களில் தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுவதில்லை என்றும், அக்கம் பக்கத்தினரை அணுசரித்துச் செல்லுவதில்லை என்றும், கட்ட வேண்டிய பில்களை கட்டாமல் சென்று வீட்டு ஓனர்களை பிரச்சனைக்குள்ளாக்குகிறார்கள் என்றும் வீட்டு ஓனர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பலர் குடியிருந்த வீட்டைக் காலி செய்து செல்லும்பொது வீட்டை அசிங்கப்படுத்திவிட்டுச் செல்லுகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
இப்பிரச்சனை பூதாகரமாக உருவெடுப்பதை தடுக்க சிங்கப்பூர் அரசு துரிதமாக எடுத்த பல்வேறு முயற்சிகளால் இந்தப் பிரச்சனை இப்பொது கணிசமாகக் குறைந்து “All Races are Welcome” என்ற நிலைக்கு பல வீட்டு ஓனர்களும் வந்திருப்பதாக வீட்டுத் தரகர்கள் (ஏஜண்டுகள்) தெரிவிக்கிறார்கள். நாளடைவில் இந்நிலை சுத்தமாக மாறிவிடும் என்றும் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் இதுபோன்ற பிரச்சனைகள் அவ்வப்போது தலையெடுப்பதும் அரசு உடனடியாக தலையிட்டு அதைக் களையெடுப்பதும் வழக்கமாக நடந்துவரும் ஒன்றாகும்.