உள்நாட்டு மாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள பஞ்சாப் குழு பிரேசில் செல்கிறது
இந்திய உள்நாட்டு மாட்டு இனங்கள் பிரேசிலில் எப்படி நன்றாகப் பராமரிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள, இந்தியாவிலிருந்து இரண்டு கால்நடை விவசாயிகள் உட்பட ஆறு உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாப் அரசாங்க பிரதிநிதிக்குழு, ஏப்ரல் 2 ம் தேதி அன்று பத்து நாள் சுற்றுப்பயணமாகப் பிரேசிலுக்கு செல்லவிருக்கிறார்கள்.
பஞ்சாப்பில் உள்ள உள்நாட்டு மாட்டு இனங்களை முன்னேற்றுவதிலும் ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அவர்களின் ஆணைக்கிணங்க இந்தச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவிலிருந்து பிரேசிலுக்கு ஜெர்ம்பிளாஸம் இறக்குமதி செய்யப்பட்ட கிர், தர்பாகர் மற்றும் கங்க்ரேஜ் உள்ளிட்ட இந்திய உள்நாட்டு மாட்டு இனங்களைப் பற்றி இந்தச் சுற்றுப்பயணத்தில் தெரிந்து கொள்ளப்போகின்றனர். இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ஜெர்ம்பிளாஸத்தை வைத்துப் பல ஆண்டுகள் ஆராய்ந்த பிறகு, இப்போது பிரேசில் அதிக பால் உற்பத்தி மற்றும் சிறந்த விலங்கு சுகாதாரத்தில் சாதனைப் படைத்துள்ளதாகக் கூறுகிறது. கிர் வகை குஜராத்தைச் சார்ந்தது, தர்பாகர் மற்றும் கங்க்ரேஜ் உள்நாட்டு இனங்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் பாலைவனத்தில் இருப்பன.
இப்பிரதிநிதிகள் குழு, தேர்ந்தெடுக்கப்படும் இனப்பெருக்கத்தைப் பயன்படுத்தி பிரேசில் எப்படி தேவையற்ற விலங்குகளை நிர்வகித்து ஆரோக்கியமான கால்நடைகளை உற்பத்தி செய்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளும். அதிக பால் உற்பத்தி மற்றும் சிறந்த இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருக்கும் இந்திய நாட்டு மாடு இனங்களுக்கு அங்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்தின் தரம் மற்றும் அளவுபற்றி ஆய்வு செய்யப்படும். அவர்கள் ஆவணத்தைப் பதிவு செய்யும் அமைப்பு பற்றியும் ஆய்வு செய்யப்படும்.
கால்நடை வளர்ப்பு இயக்குனர் ஹெச்.எஸ்.சந்தா இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில், “பல ஆண்டுகளுக்கு முன்பு பிரேசில் நமது உள்நாட்டு இனங்களான, கிர், தர்பாகர் மற்றும் கங்க்ரேஜ், ஆகியவற்றின் ஜெர்ம்பிளாஸத்தை எடுத்துச் சென்றது. இப்போது, அவர்கள் ஆரோக்கியமான விலங்குகள் மற்றும் அதிக பால் உற்பத்தி இருப்பதாகக் கூறுகின்றனர். அவர்களிடம் உள்ள சிறந்த கிர் மாடுகள் இங்கே நம்மிடம் இருக்கும் மாடுகளைவிட இரண்டு மடங்கு அதிகமாகப் பால் உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கால்நடை மேலாண்மையில் உள்ள வேறுபாட்டை ஆராய விரும்புகிறோம்” என்றார்.
“தேவையற்ற விலங்குகளின் பராமரிப்பு என்பது இங்கே ஒரு பெரிய பிரச்சினை. மாடுகள் வதைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது, ஆனால் இங்கே அதை அனுமதிக்க முடியாது. எனவே, ஒரு மாற்று வழியைக் கண்டறிய வேண்டும். அவர்கள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தை பின்பற்றுகின்றனர். ஆரோக்கியமான மற்றும் அதிக பால் தரக்கூடிய விலங்குகள் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. சிறந்த ஊட்டச்சத்து மற்றும் உயர் தரமான உணவு அவர்களது மாட்டு இனங்களை மேம்படுத்தியுள்ளது. இந்த அனைத்து கருத்துகளையும் ஆய்வு செய்ய வேண்டும், ” என்று பஞ்சாப்பின் பால் வளர்ச்சி இயக்குனர் இந்திரஜித் சிங் கூறினார்.
இனப்பெருக்கம் தான் ஆய்வின் முக்கியமான பகுதியாக இருந்தாலும், மாநிலத்தின் ஒரே கால்நடை பல்கலைக்கழகமான- குரு அங்கத் தேவ் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து (GADVASU) ஒரு இனப்பெருக்க நிபுணர் கூட, இந்த பிரதிநிதிகள் குழுவில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எம்.எஸ்.சாந்து- ஐஏஎஸ், கால்நடை வளர்ப்பு கூடுதல் தலைமை செயலாளர், இந்திரஜித் சிங்- பஞ்சாப் பால் வளர்ச்சி இயக்குனர், ஹெச்.எஸ்.சந்தா- பஞ்சாப் கால்நடை வளர்ப்பு இயக்குனர், மற்றும் பி.கே. உப்பல்- முதல்வரின் கால்நடை வளர்ப்பு ஆலோசகர் ஆகிய நான்கு அதிகாரிகளும் பிரேசிலுக்கு செல்லும் குழுவில் அடங்குவர்.
ஏ.எஸ்.நந்தா, GADVASU வின் துணை வேந்தர், தொடர்பு கொள்ளப்பட்ட போது, “ஒரு தூதுக்குழு குறிப்பிட்ட இனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள பிரேசிலுக்கு சென்றால், கால்நடை வளர்ப்பு என்ற முக்கிய பகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். ஒரு குறிப்பிட்ட இனம் இந்திய நிலைகளுக்கு பொருத்தமானதா இல்லையா என்பது போன்ற தொழில்நுட்ப அறிவு மற்றும் வழிகாட்டல், இனப்பெருக்க நிபுணர்களால் மட்டும் தான் வழங்க முடியும். GADVASU நிபுணர்களைச் சேர்த்திருந்தால் மிகவும் பிரயோஜனமாக இருந்திருக்கும். ஏனெனில், இறுதியில் விஞ்ஞானிகள் பிரேசிலிலிருந்து கொண்டு வரும் தொழில்நுட்பத்தை களத்தில் செயல்படுத்த வேண்டும். மீன்வளத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள மேற்கொண்ட சீன சுற்றுப்பயணத்தில் GADVASU நிபுணர்கள் ஒரு பகுதியாக இருந்தனர், மேலும் அவர்களுடன் ஒப்பந்தமும் கையெழுத்திட்டனர்.