கோக்ஸ் பஜார், வங்க தேசம்

மியான்மரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்க்யா அகதிகளில் பலர் குண்டு காயங்களுக்கு வங்க தேச மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மியான்மரில் பவுத்த மத வெறியர்களும், மியான்மர் ராணுவமும்  ரோஹிங்க்யா இஸ்லாமியர்கள் மேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.  அதனால், அங்கிருந்து பலர் உயிர் பிழைக்க நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.  வங்க தேச எல்லையில் உள்ள கடற்கரை நகரத்தில் மட்டும் சுமார் 3,00,000 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.  கலகக்காரர்களை அடுக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் என ராணுவத்தினரால்  கூறப் பட்டாலும் ரோஹிங்க்யா பொது மக்களை குறி வைத்து தாக்குதல் நடைபெறுவதாக தப்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோக்ஸ் பஜார் என்னும் வங்க தேச எல்லைப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள பலருக்கு துப்பாக்கி குண்டுகளால் காயம் ஏற்பட்டுள்ளது.  அவர்கள் சிகிச்சைக்காக இங்குள்ள மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.  கோக்ஸ் பஜாரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவில் வருவதால், படுக்கைகள் நிரம்பி பலர் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

சதார் மருத்துவமனை என்னும் புகழ்பெற்ற மருத்துவமனையில் தற்போது 80 ரோஹிங்க்யா அகதிகள் குண்டு காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் தற்போது இடமின்மையால் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.   அபு தாஹிர் என்பவர் தனது ஆறு வயது மகனுக்கு சிகிச்சைக்காக இங்கு அனுமதித்துள்ளார். அபு தாஹிர் தாக்குதல் பற்றி கூறுகையில்ரா,ணுவத்தினர் கடுமையாக சுட்டதில் தன் மகன் படுகாயம் அடைந்ததாக கூறுகிறார்.  அதே போல கரீம் என்பவரின் முழங்காலில் குண்டு பாய்ந்து அவருடைய காலையே இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்தவமனையில் தலைமை மருத்துவர் ஷகீன் அப்துல் சவுத்ரி, ”எனது வாழ்க்கையில் இவ்வளவு கொடூரமாக குண்டு தாக்குதல் அடைந்த நோயாளிகளை இதுவரை பார்த்ததில்லை.  குண்டுக் காயங்களுடன் எந்த ஒரு முதலுதவி சிகிச்சையும் இல்லாமல் இத்தனை தூரம் பயணம் செய்ததில் பலருக்கு காயங்களில் தொற்று உண்டாகி உள்ளது.  மருத்துவமனையில் தற்போது உள்ள வசதிகள், மற்றும் மருந்துகளைக் கொண்டு இத்தனை பேருக்கும் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம்.  அரசு மேலும் பண உதவி, மற்றும் மருத்துவ உதவிகளை விரைவில் அளிக்க வேண்டும்.” எனக் கூறி உள்ளார்.