ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர், அல்வார் லோக்சபா தொகுதிகள், மண்டல்கார் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் பாஜக கோடா மாவட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு அணியின் தலைவர் அசோக் சவுத்ரி, அமித்ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

‘‘விரைவில் நல்ல பதில் வரும். மாநில தலைமை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. டில்லி குழுவினரை தான் நம்பியுள்ளேன்’’ என்று சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘முதல்வர் வசுந்தரா ராஜே செயல்பாட்டில் கட்சியினர் மகிழ்ச்சியாக இல்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னரும் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றால் மாநில தலைமையில் மாற்றம் வேண்டும். கட்சி தொண்டர்கள் ஒரு பிரச்னைக்காக எம்எல்ஏ.விடம் சென்றால், அவர் எம்.பி.யிடம் திருப்பி விடுகிறார். எம்.பி.யிடமும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் தொண்டர்கள் வெறும் கையுடன் திரும்புகின்றனர்.

எங்களது கைகள் கட்டப்பட்டுள்ளது. மேற்கொண்டு எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கட்சியினர் புலம்புகின்றனர். மாநில அரசியலில் அடிமைத்தனம் மற்றும் முதலாளித்துவ கலாச்சாரத்திற்கு முடிவு ஏற்படும் நேரம் வந்துவிட்டது. தொண்டர்கள் அடிமைகளாக உள்ளனர். கடுமையான உழைப்பாளிகளான இவர்கள் ஒரு அளவுக்கு மேல் கட்சி புறக்கணித்துள்ளது. தொண்டகள் இப்படி ஏற்ற இறக்கமாக இருந்தால் அரசியலில் பாகுபாட்டை ஏற்படுத்தும்’’ என்றார்.

ராஜஸ்தான் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பாஜக.வினர் கருத்து கூறாமல் மவுனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.