தென்காசி: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக  குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் மரணம் அடைந்ததால், சுற்றுலா பயிணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து சென்றனர்.

தற்போது, அங்கு சாரல் மழை பெய்து வரும் நிலையில், வெள்ளப்பெருக்கும் குறைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கி உள்ளது. இதையடுத்து, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில்  சுற்றுலா பயணிகள் நீண்டவரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனா்.