ம்ரிதசரஸ்

த்மஸ்ரீ விருது பெற்ற சீக்கிய பக்திப்பாடகர் நிர்மல் சிங் இன்று அதிகாலை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துப் பலி ஆனோர் எண்ணிக்கையும் கூடி வருகிறது.  இது வரை நாட்டில் 1800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 41 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  உலகெங்கும் பல பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் சிங் மிகவும் பிரபல சீக்கிய பக்தை பாடகர் ஆவார்.  இவர் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் ஆஸ்தான பாடகராக இருந்துள்ளார்.  இவர் சீக்கிய பாடல்களில் உள்ள 31 ராகங்களிலும் முழு ஞானம் பெற்றவர் என்பதால் இவருக்குக் கடந்த 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.

நிர்மல் சிங் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்துள்ளார்.  அதன் பிறகு அவர் டில்லி, சண்டிகர், உள்ளிட்ட பல இடங்களில் நடந்த ஆன்மீக விழாக்களில் கலந்துக் கொண்டுள்ளார்.   மார்ச் 19 ஆம் தேதி சண்டிகரில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் தனது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டுள்ளார்.  அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 30 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு நிர்மல் சிங் சோதிக்கப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்ததால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.  சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நிர்மல் சிங் மரணம் அடைந்தார்.  அவருக்கு தற்போது 62  வயதாகிறது.   இது பஞ்சாபில் கொரோனாவால் நிகழ்ந்த 5வது மரணம் ஆகும்.

அவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா தொந்தரவு இருந்ததால் முன் கூட்டியே மூச்சுத் திணறலுக்கான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் இதனால் கொரொனா பாதிப்பு அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மனைவி, மகன், இரு மகள்கள், ஓட்டுநர் மற்றும் உறவினர்கள் என அவருடன் வசித்தவர்கள் மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.