கொச்சி:
கேரளாவில் சினிமா துறைக்கு மின் கட்டண சலுகை மற்றும் கேளிக்கை வரை ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் கேரளாவில் காரணமாகக் கடந்த 10 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மலையாள சினிமா துறை கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், கேரளா பிலிம் சேம்பர் உட்பட மலையாள திரைத் துறையைச் சேர்ந்த அனைத்து சங்கத்தினரும் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கடந்த 5ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டுதல் நிபந்தனைகளின் படி தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி வழங்கியது.
இருப்பினும் உரிய நிவாரணம் கிடைக்காமல் தியேட்டர்களை திறக்க முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்களும், கேரள பிலிம் சேம்பரும் கூறியது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம்
இன்று திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் என்று தியேட்டர் உரிமையாளர்களும், கேரள பிலிம் சேம்பரும் முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தன. அவர்களது கோரிக்கையை ஏற்று கொண்ட முதலமைச்சர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை சினிமா தியேட்டர்களுக்கான கேளிக்கை வரி முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும், தியேட்டர்கள் மூடப்பட்டுக் கிடந்த 10 மாதத்திற்கான மின்சார நிலை கட்டணம் 50 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், மீதமுள்ள தொகையைத் தவணைகளாகக் கட்ட அனுமதி அளிக்கப்படும். கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தியேட்டர்கள் கட்ட வேண்டிய சொத்து வரியை மாத தவணைகளாகக் கட்டலாம் என்றும், இது தவிர உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, பிலிம்ஸ் டிவிஷன், மின்சாரத் துறை உள்பட பல்வேறு லைசென்சுகளுக்கான காலாவதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த் அறிவிப்பால் கேரள திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.