ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ₹65,000 கோடி முதலீட்டில் அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் 500 கம்ப்ரெஸ்ட் பயோ கேஸ் (CBG) ஆலைகளை நிறுவ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ((RIL)) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் குஜராத்திற்கு வெளியே RIL இன் மிகப்பெரிய எரிசக்தித் துறை முதலீடாக கருதப்படும் இதன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு சிபிஜி ஆலைக்கும் ₹130 கோடி முதலீடு தேவைப்படும் என்றும் இதனால் சுமார் 2.5 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் கணிப்புகளின்படி, இந்த முயற்சியானது மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) வசூல், மின் கட்டணம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வரிகள் மூலம் 25 ஆண்டுகளில் மொத்தம் ₹57,650 கோடி நிதிப் பலன்களை அளிக்கும்.

இத்திட்டம் உள்ளூர் விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நேப்பியர் புல் போன்ற மாற்று எரிசக்திக்கு பயன்படும் பயிர்களை பயிரிடுவதன் மூலம், விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ₹30,000 வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆலையும் ஆண்டுதோறும் 7,800 டன்கள் CBG உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாக இருக்கும், அனைத்து ஆலைகளிலும் மொத்தம் சுமார் 39 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது இந்த முயற்சி மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிபொருளானது தினசரி சுமார் 9.38 இலட்சம் இலகுரக வர்த்தக வாகனங்களுக்கு பயன்படும், என்றும் இது டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு மாற்றாக அமையும் என்றும் கூறப்படுகிறது.