டிஸ்னி ஸ்டார் இந்தியா மற்றும் ரிலையன்ஸின் வயாகாம்-18 ஆகியவை ஒரே பொழுதுபோக்கு நெட்ஒர்க்காக மாறியுள்ளது. இதனை இரு நிறுவனங்களும் இன்று கூட்டாக அறிவித்துள்ளது.

இந்த இணைப்பை அடுத்து 2 OTT 120 சேனல்களுடன் நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்துள்ள டிஸ்னி-ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்டுக்கு கூட்டாக இப்போது 75 கோடி பார்வையாளர்கள் உள்ளனர்.

ரூ.70,352 கோடிக்கு செய்யப்பட்டுள்ள இந்த இணைப்பு ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் 63.16% பங்குகளையும், டிஸ்னி 36.84% பங்குகளையும் வைத்திருக்கும். இந்த புதிய நிறுவனத்தின் தலைவராக நீதா அம்பானி இருப்பார். துணைத்தலைவராக உதய்சங்கர் இருப்பார்.

கடந்த ஓராண்டாக நடந்து வந்த இந்த இணைப்பு நடவடிக்கை நிறைவடைந்ததை அடுத்து இந்த கூட்டு முயற்சிக்காக ரிலையன்ஸ் ரூ.11,500 கோடி முதலீடு செய்துள்ளது.

இந்த மெகா இணைப்பில், டிஸ்னி ஸ்டாரின் 80 சேனல்களும், ரிலையன்ஸ் வயாகாம்18-ன் 40 சேனல்களும் சேர்க்கப்படும். அதாவது, மொத்தம் 120 சேனல்கள் இருக்கும். இருப்பினும், இந்த சேனல்களில் சில மூடப்படலாம்.

டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா.ஆகிய இரண்டு OTT சேனல்களும் உள்ளன.

ரிலையன்ஸின் செய்தி சேனல்கள் நெட்வொர்க் 18 குழுமத்தின் கீழ் வருவதால் அது இந்த இணைப்பு நடவடிக்கையில் இடம்பெறவில்லை.

பிசிசிஐ நிர்வகிக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிவி உரிமையையும் வயாகாம் 18 பெற்றுள்ளது, அதே நேரத்தில் 2027 வரை ஐபிஎல்லை ஒளிபரப்பும் டிவி உரிமையை டிஸ்னி ஸ்டார் வைத்துள்ளது.

கடந்த 2024 மார்ச் மாதம் முடிவடைந்த நிதியாண்டில் ரிலையன்ஸ்-டிஸ்னி ஆகிய இரண்டு நிறுவனங்களின் மொத்த ஆண்டு வருமானம் ₹ 26,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.