டில்லி

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பற்றிய முழு விபரம் ஒரு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.  ஆனால் ஜியோ நிறுவனம் அது உண்மையான விபரங்கள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.

fonearena,com தளத்தில் வெளியான தகவல்கள்

இணையதளம் ஒன்று கோடாடி.காம் மூலமாக 2017 ஆம் வருடம் மே 18ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதன் முகவரி magicapk.com என்பதாகும்,  அதன் உரிமையாளர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.  அந்த தளத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் விபரம் என ஒரு பதிவு வெளியானது.  அதில் ஒவ்வொரு ஜியோ வாடிக்கையாளரின் மொபைல் எண், ஆதார் எண், மற்றும் உள்ள அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விவரங்களை கண்ட fonearena,com என்ற தளம் இந்த தகவல்களை வெளியிட்டது.  இந்த தளத்தின் வருண் க்ரிஷ் இது பற்றி மற்ற ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் தகவல் அளித்தார்.  அதில் தனது எண், மற்றும் அவர் சக  பணியாளர்கள் அனைவரின் எண்களும், விவரங்களும் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.  இதை சிலர் பரிசோதித்ததில் பல எண்களுக்கான விவரங்களை காண முடிந்ததாக தெரிவித்தனர்.  ஆனால் ஒரு சில எண்களில் ஆதார் மற்றும் ஈ மெயில் முகவரி மட்டும் காணப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

ஒரு சில மணிகளில் அந்த magicapk.com இணையதளம் பலருக்கு தெரியவில்லை.  அது க்ராஷ் ஆனதா இல்லை முடக்கப்பட்டதா என சரி வரத் தெரியவில்லை.

magicapk-com தற்போதைய நிலை

இது குறித்து ஜியோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அந்த விவரங்கள் எல்லாம் தவறானது.  எங்களின் வாடிக்கையாளர் விவரங்கள் எங்களிடம் பத்திரமாக உள்ளன.  இதை யாராலும் திருட முடியாது.  இதை தொலைதொடர்பு அதிகாரிகளிடம் மட்டுமே எங்கள் நிர்வாகம் பகிர்ந்துக் கொள்ளும்.   இது போல தவறான தகவல்களை பதிந்தமைக்காக அந்த இணையதளத்தின் மீது விரைவில் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறி உள்ளது.