சென்னை: மெரினாவில் அமையவுள்ள கருணாநிதியின் பேனா நினைவு சின்ன மாதிரி படம் வெளியீடு. இந்த சின்னம் அமையவுள்ள பகுதி, நில அதிர்வு மண்டல வரைபடத்தின்படி, மிதமான ஆபத்து மிக்க பகுதி என்பது ‘வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை’ மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இதுகுறித்து ஜனவரி 31ந்தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் நினைவாலயம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக 2.23 ஏக்கர் பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மெரினா கடலுக்குள்ளும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அறிவித்தார். இதன்படி உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்று இந்த அமையவுள்ளது.
இந்த பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290 மீட்டர் தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மெரினாவில் அமையவுள்ள கருணாநிதியின் பேனா நினைவு சின்ன மாதிரி படம் வெளியீடப்பட்டுள்ளது. கடலில் பேனா நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள கட்டுமானம் கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளது. பேனா சிலைக்கு செல்லும் பாலம் கடல் அலை வடிவத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும், பேனா நினைவுச்சின்னத்தின் கீழ் கருணாநிதி கூறிய கருத்துகள் கல்வெட்டாக பொறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் தொடர்பான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டுள்ள பேனா அமைவிடம் பகுதியானது, இந்திய நிலையான நில அதிர்வு மண்டல வரைபடத்தின்படி, ஆய்வுப் பகுதி மண்டலம் 3-இல் இந்தப் பேனா நினைவுச் சின்னம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, மிதமான ஆபத்துப் பகுதி (The study area falls under Zone-III (Moderate risk) according to the Indian Standard Seismic Zoning Map) என்பது தெரிய வருகிறது. அதாவது, இந்தப் பகுதி புயல், சுனாமி, சூறாவளி ஏற்படக் கூடிய வாய்ப்புள்ள மிதமான ஆபத்துப் பகுதி என்பதையே இது குறிக்கிறது.