டெல்லி: 27ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதலமைச்சர் என்கிற பெருமையையும் ரேகா குப்தா பெறுகிறார்.
டெல்லி தேர்தலில் பாஜக முழுமையான வெற்றியைப் பெற்றது, 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 48 இடங்களை வென்றது, மேலும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை (AAP) 22 இடங்களாகக் குறைத்தது. இருப்பினும், பாஜக முதல்வர் வேட்பாளர் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டது, மேலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகும், யார் அந்தப் பதவிக்கு உயர்த்தப்படுவார்கள் என்பது மர்மமாகவே நீடித்து வந்த நிலையில், நேற்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெல்லி ஷாலிமார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ரேகா குப்தாவை முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து ரேகா குப்தா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவை, நேற்று இரவு டெல்லி முதல்வர் யார் என்ற அறிவிப்பை பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தொடர்ந்து ரேகா குப்தா. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் . இந்நிலையில் இன்று டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா
இந்த பதவி ஏற்பு விழா இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இன்று மதியம் 2மணி அளவில் முதல்வராக ரேகா குப்தா பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரேகா குப்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர்கள், பொறுப்பு முதலமைச்சர் அதிஷி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, டெல்லி பொதுப் பணித் துறை சார்பில் ராம்லீலா திடலில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இந்நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக ஆளும் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
பாஜக முதல்வர் பதவி ஏற்புவிழாவை முன்னிட்டு, டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்படடு உள்ளது. . 25,000-க்கும் மேற்பட்ட காவலர்களும் 15-க்கும் மேற்பட்ட துணை ராணுவக் குழுவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராம்லீலா திடலில் 5000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். . 2,500-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதுபோல டெல்லி நகர போக்குவரத்து காவல் துறை சார்பிலும் பிப். 20-ஆம் தேதி நண்பகலுக்குப் பிறகு ராம்லீலா நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும், அதைச் சுற்றியுள்ள சிறுகடைகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர் பிற்பகலுக்குப் பிறகு கடைகளைத் திறக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.