டில்லி

ந்திய மாநிலக் கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி சென்ற ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய கட்சி  என தெரிய வந்துள்ளது.

குடியரசு சீர்திருத்த சங்கம் மாநிலக் கட்சிகளின் நிதி நிலை குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.  இந்த ஆய்வில் 37 மாநிலக்கட்சிகளின் 2017-18 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்கு அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது.   அந்த ஆய்வின் முடிவை ஒரு அறிக்கையாக சங்கம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

மொத்தமுள்ள 48 மாநிலக் கட்சிகளில் 37 கட்சிகளின் வரவு செலவு கணக்கு மட்டுமே தேர்தல் ஆணைய வலை தளத்தில் உள்ளதால் இந்த கட்சிகள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.   ஆணைய தளத்தில் வரவு செலவு கணக்கு இல்லாத 11 கட்சிகளில் தேசிய மாநாடு, மக்கள் குடியரசுக் கட்சி மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணியும் அடங்கும்.

கடந்த 2017-18 ஆம் ஆண்டு 37 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.237.28 கோடி ஆகும்.   இதில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ரூ. 47.19 கோடி வருமானம் வந்துள்ளது.   இது மொத்த மாநிலக் கட்சிகளின் வருமானத்தில் 19.89% ஆகும்.   திமுக ரூ.35.778 கோடி வருமானத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது.    மூன்றாவது இடத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி உள்ளது.

இந்த கட்சிகளுக்கு நன்கொடைகள், உறுப்பினர் கட்டணம், சந்தா தொகை மற்றும் வட்டியின் மூலம் வருமானம் கிடைத்துள்ளது.    இந்த கட்சிகளின் வருமானத்தில் 32.58% நன்கொடையாக கிடைத்துள்ளது.   உறுப்பினர் கட்டணமாக 36.5% வருமானம் வந்துள்ளது.  இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 84.01% உறுப்பினர் கட்டணமாக வருமானம் வந்துள்ளது.

சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டை விட சென்ற ஆண்டு சமாஜ்வாதி மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு வருமானம் மிகவும் அதிகரித்துள்ளது.   அதே நேரத்தில் திமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரசுக்கு ஓரளவு வருமானம் அதிகரித்துள்ளது.

இந்த 37 கட்சிகளின் சென்ற ஆண்டு மொத்தச் செலவு ரூ. 170.45 கோடி ஆகும்.  இதில் சமாஜ்வாதி, திமுக மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் அதிகம் செலவு செய்துள்ளன.    இந்த செலவுகளின் பெரும்பாலானவை தேர்தல் செலவுகள், நிர்வாகம் மற்றும் பொதுச் செலவுகள் ஆகும்.