டெல்லி:
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் வருங்கா வைப்பு நிதியான பிஎஃப் வட்டி விகிதத்தை மத்தியஅரசு குறைத்து உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள 6 கோடி மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
PF மீதான வட்டி விகிதம் 8.65 ஆக இருந்து வந்த நிலையில், தற்போது, அதை 8.5 ஆக குறைத்துள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்படுவதால், 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2018-2019 நிதியாண்டிற்கான 8.65 சதவீத வட்டி விகிதத்தை EPFO அறிவித்தது. தற்போது, ஊழியர் ஓய்வூதிய (திருத்த) திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை ஓரளவு திரும்பப் பெறுவதற்கான EPFOவின் திட்டத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த நிலையில், 2019-20ம் நிதியாண்டில் வட்டி விகிதம் 0.15% குறைந்து 8.50% ஆக இருக்கும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
எனவே, பி.எஃப். கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள், நடப்பு ஆண்டில் தங்கள் வருங்கால வைப்பு நிதி வைப்புகளில் 0.15% குறைந்த வருவாயைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு வருவாய் குறைந்ததால் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.