போர்ட், சூடான்
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வரும் சூடானுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 8 டன் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது
கடந்த சில நாட்களாக சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே கடும் மோதல் நடைபெறுவது தெரிந்ததே. இந்த மோதல் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கியது. இந்த மோதலில் பல உலக நாடுகள் சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த உள்நாட்டு போர் காரணமாக சூடான் நாட்டின் மருத்துவ கட்டமைப்பு கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. நாட்டில் ஏராளமான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. உலகின் பல தொண்டு நிறுவனங்களும் தங்கள் பணிகளை நிறுத்தி விட்டு பணியாளர்களைத் திரும்ப அழைத்து வருகின்றன.
சூடானில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இந்த மோதலில் சுமார் 520க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததாகவும், 4500 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆப்ரிக்க பிராந்திய இயக்குநர் பாட்ரிக் யூசுஃப் செய்தியாளர்களிடம், “ஜோர்டானில் இருந்து 8 டன் அவசரக்கால மருத்துவ பொருட்களுடன் ஒரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விமானம் போர்ட் சூடா ன் நகரில் தரை இறங்கி உள்ளது. இந்த மருந்து பொருட்கள் சண்டையில் காயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.