பெண்களுரூ:
கர்நாடக கடலோர மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் பலத்த மழை பெய்கிறது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில், பண்ட்வால், சுள்ளியா, புத்தூர், கடபா, பெல்தங்கடி, மூடபித்ரி ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. உடுப்பியில், உடுப்பி, கார்கலா உள்ளிட்ட பகுதிகளிலும், உத்தரகன்னடாவில் கார்வார், பட்கல், ஒன்னாவர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இந்த கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது.
இந்நிலையில் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓடும், நேத்ராவதி, குமாரதாரா, பல்குனி, நந்தினி உள்ளிட்ட ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த ஆறுகளின் கரையோரத்தில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் 200 மில்லி மீட்டர் அளவுக்கு அதிக கனமழை பெய்யும் என்பதால் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் 4 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.