கோவை: புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும்  இலவசமாக  3 மாத ‘ரீசார்ஜ்’, வழங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வைரலான நிலையில், இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  ‘இதுபோன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம்’ என, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

சமூக வலைதளங்களில் உண்மை செய்திகளை விட வதந்திகளும், புரம்பேசும் செய்திகளுமே அதிக அளவில் பரவி வருகின்றன. இதனால் தேவையற்ற சிக்கல்களும், மோதல்களும், பணமிழப்பும் ஏற்பட்டு வருகிறது.  பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரிலும், மக்களை ஈர்க்கும் விளம்பரங்கள் வாயிலாக இணைய ‘லிங்க்’ அனுப்பும் சைபர் கிரைம் குற்றவாளிகள், அந்த ‘லிங்க்’ வாயிலாக உள் நுழையும் பொது மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை களவாடி விடுகின்றனர்.இதை தடுக்க அவ்வப்போது மத்திய மாநில அரசுகள், காவல்துறையினர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளையும்  கட்டுப்படுத்துவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில், பிரமதர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய அரசு திட்டங்களை குறிப்பிட்டும் இதபோன்ற மோசடிகள் நடந்து வந்தது. இதுகுறித்து மத்தியஅரசு எச்சரிக்கை செய்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது  முதல்வர் ஸ்டாலின் பெயரிலும் ஒரு குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

அந்த செய்தியில்,  ‘புத்தாண்டு ரீசார்ஜ் சலுகை’ என்ற தலைப்புடன், ‘புத்தாண்டையொட்டி ஸ்டாலின் அனைவருக்கும், 2 மாத ரீசார்ஜ், 749 ரூபாய் முற்றிலும் இலவசம் எனக்குறிப்பிட்டு, ஒரு ‘இணைய லிங்க்’ வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ‘லிங்க்’கில் நுழைந்தால், அந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அத்தகைய விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்; கவனமுடன் இருக்க வேண்டும்’ என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.