டில்லி
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தி அழைத்து வருவதில் ரகசிய சடட சிக்கல்கள் உள்ளதால் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பிரபல இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையா ரூ. 9000 கோடிக்கு மேல் இந்திய வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடி விட்டார். மல்லையாவை மீண்டும் அழைத்து வர சிபிஐ க்டும் முயற்சியில் இறங்கியது. இதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் மல்லையாவை நாடு கடத்தலாம் எனக் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து விஜய் மல்லையா செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நாடு கடத்தத் தடை விதிக்க மறுத்து விட்டது. எனவே அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் முயன்று வருகின்றனர். இந்நிலையில் அவர் நேற்று இரவு இந்தியா வந்ததாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் அவர் இன்னும் இந்தியாவுக்கு அழைத்து வரப்படவில்லை
இது குறித்து பிரிட்டன் தூதரக செய்தி தொடர்பாளர், “விஜய் மல்லையாவுக்கு இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் உண்டாகலாம். எவ்வளவு காலம் தாமதம் ஏற்படும் என தற்போது சொல்ல முடியாது. அவரை நாடு கடத்துவதில் ஒரு ரகசிய சட்டச் சிக்கல் உள்ளது. எனவே அது முழுமையாக தீர்க்கப்பட்ட பிறகு அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல முடியும்.
பிரிட்டன் நாட்டு சட்டப்படி சட்டச் சிக்கல் தீரும் வரை யாரும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த சட்ட சிக்கல் மிகவும் ரகசியமானது என்பதால் இது குறித்து விவரிக்க முடியாது. மேலும் இந்த பிரச்சினை எத்தனை நாட்களில் தீரும் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆயினும் பிரச்சினையை விரைவில் தீர்க்க முயற்சி நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.