சென்னை
சென்னையில் பல நீர்நிலைகள் தூர்க்கப்பட்டதின் விவரங்கள் இதோ உள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னையில் பெய்த கடும் மழை 2015ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த பெரு வெள்ளத்தை பலருக்கும் நினைவூட்டியது. தற்போது மழை நின்ற போதிலும், மீண்டும் மழை பெய்யலாம் என்னும் ஒரு ஆருடம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதே. இது போல மழைக்காலத்தில் கடும் வெள்ளக்காட்டில் சென்னை மிதப்பது குறித்து சென்னையின் ஒவ்வொரு பகுதியின் பழைய வரை படங்களை பார்க்கையில் பல நீர்நிலைகள் தூர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அத்துடன் அந்த தூர்க்கப்பட்ட இடங்களே வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரிய குளம்
அருகில் உள்ள இந்த வரைபடத்தில் பெரிய குளம் THE LONG TANK என வழங்கப்பட்டநீர் நிலை தற்போது எங்குள்ளது எனவே தெரியவில்லை. நூறாண்டுகளில் இந்த இடம் மக்கள் தொகை மிகுந்த இடமாகி உள்ளதுடன் தி நகர் என அழைக்கப்படும் தியாகராய நகர் நகைக்கடை மற்றும் துணிக்கடைகள் நிறைந்து வணிக நகரமாகி விட்டது. மத்திய சென்னை பகுதியில் அமைந்துள்ளது.
வியாசர்பாடி குளம்
வியாசர்பாடி குளம் என்னும் இந்தக் குளம் 1971ஆம் வருட சென்னை வரைபடத்தில் காணப்படுகிறது. இந்த இடத்தில் தற்போது டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரி, பி வி காலனி, மற்றும் சாலியம்மன் காலனி உள்ளது. தற்போதுள்ள வரைபடத்தில் இந்த குளம் மறைந்தே போய் விட்டது.
வேளச்சேரி ஏரி மற்றும் ஆதம்பாக்கம் ஏரி
ஏரியை தூர்த்து உருவான பகுதியான வேளச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2015ஆம் வருடம் பல அடிக்கு வெள்ள நீர் தேங்கி இருந்தது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு மழைக்காலத்திலும் மழை நீர் தேங்குவது இந்தப் பகுதியில் வழக்கமான ஒன்று. 1970 வரையில் ஆன சென்னை வரைப்படங்களில் இந்த ஏரிகள் தென்படுகின்றன. ஆனால் தற்போது ஆதம்பாக்கம் ஏரியும் இருந்ததற்கான தடயம் சிறிதும் இல்லை.
காட்டேரி ஏரி
இந்த ஏரி கடந்த 1970; வெளியான சென்னை வரைபடத்தில் அடையாறு ஆற்றைச் சுற்றி காணப்படுகிறது. தற்போது இந்த ஏரி இருந்த இடத்தில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையமும் தரமணி மின்சார வாரிய அலுவலகுமும் அமைந்துள்ளது. தரமணி பகுதியில் இந்த ஏரி முன்பு இருந்துள்ளது.
கொடுங்கையூர் ஏரி
வடசென்னையில் முன்பு இருந்த கொடுங்கையூர் ஏரி தற்போது முழுவதுமாக காணப்படவில்லை. இந்த ஏறி இருந்த இடத்தில் குடியிருப்பு பகுதியான முத்தமிழ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரை அமைத்தது அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகும்.
கொன்னூர் குளம்.
இந்த குளம் இருந்த இடத்தில் தற்போது வில்லிவாக்கம் சிட்கோ நகர் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதுமாக 2015ஆம் வருட வெள்ளத்தில் நீருக்கடியில் மூழ்கியது நினைவிருக்கலாம். இந்த இடம் குளத்தில் அமைந்துள்ளதால் முன்பு நீர்பிடிப்பு பகுதியாக இருந்துள்ளது. எனவே அருகிலுள்ள அனைத்து நீரும் இந்த இடத்தில் வடிந்து, வெள்ளம் குறைய பலநாட்கள் ஆகின. இப்பொழுதும் ஒவ்வொரு வருடமும் கனமழை பொழியும் போதெல்லாம் இங்கு வெள்ளம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்
இந்தப் பதிவில் சொல்லாத பல நீர்நிலைகள் குடியிருப்புப் பகுதிகளாக மாறி உள்ளது. தற்போது மிகச் சமீபத்தில் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்பாக மாற்றப்பட்டுள்ள ஒரு பகுதியின் பெயர் முகப்பேர் ஏரி ஸ்கீம் என்பது குறிப்பிடத்தக்கது.