புதுடெல்லி: நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், அந்நிறுவனத்தின் சரிவுக்கு, பொருளாதார மந்தநிலை என்பதையும் தாண்டிய காரணிகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
யோகா குரு என்றழைக்கப்பட்ட பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகள் நாட்டில் குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டன. ஆனால், தற்போது அந்நிறுவனப் பொருட்களின் விற்பனை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பெரிய சரிவை சந்தித்துள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிடப்படாத விரிவாக்கம், மோசமான விநியோக அமைப்பு, பொருட்களின் தரத்தில் நிச்சயமற்ற தன்மை மற்றும் முறையற்ற வணிக நடைமுறை உள்ளிட்ட காரணிகள், பொருளாதார மந்தநிலையுடன் சேர்ந்துகொண்டு பதஞ்சலியைப் பதம் பார்த்துவிட்டன என்கின்றனர் பொருளாதார பார்வையாளர்கள்.
தொடர்ந்து கடந்த இரண்டாவது நிதியாண்டாக பதஞ்சலி நிறுவன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-17 காலகட்டத்தில் பதஞ்சலி பொருட்களின் விற்பனை அளவு ரூ.10000 கோடி. அடுத்த நிதியாண்டில் அந்த அளவு ரூ.20000 கோடி என்ற அளவில் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விற்பனையின் அளவு ரூ.8100 கோடி என்பதாக சரிந்தது.
தற்போது மீண்டும் சரிந்துள்ளது. மோடி அரசின் கொள்கைகளால் நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை பலதுறைகளையும் பாதித்துள்ளதைப் போல், அரசின் ஆதரவுபெற்ற பதஞ்சலியையும் பாதித்துவிட்டது.