விடுதலையானவனுக்கு புது ரூட்டில் கைவிலங்கு
’’ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மா இருக்காது ‘’ என்பார்கள் .
உண்மை தான்.
மே.வங்க மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு ருசிகரம்.
இரு சக்கர வாகனம் திருடியதாக கொல்கத்தாவின் அனைத்து காவல் நிலையங்களிலும் சுமன் என்ற இளைஞன் மீது வழக்குகள் உள்ளன.
ஒரு வழக்கில் கைதாகி, கொல்கத்தாவில் உள்ள கிருஷ்ணாநகர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான்.
அது மிகவும் நெரிசலான ஜெயில்.
கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்ததால் சுமனை ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் பரோலில் விடுதலை செய்தனர்.
என்ன நிபந்தனை?
வெளியே போய் திருடக்கூடாது என்பதே நிபந்தனை.
’பார்க்கலாம்’ என்று அலட்சியமாக கூறி விட்டு, வெளியே வந்த சுமனுக்கு, கைகள் துறுதுறுத்தன.
பகேலா என்ற இடத்தில் இனிப்பு கடையில் ‘ஸ்வீட்’ வாங்க நின்று கொண்டிருந்த கவுசிக் என்பரின் சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் , சுமன் கண்களை உறுத்தியது.
சில விநாடிகளில் கவுசிக் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன். சுமன் பாக்கெட்டுக்கு இடம் மாறியது.
ஆம்.
பைக் திருடன் மொபைல் திருடனாக உருமாறி இருந்தான்.
ரோந்து பணியில் இருந்த போலீசார், சுமனை பிடித்து விட்டனர்.
இங்கே ஒரு ’ட்விஸ்ட்,’
‘பிக் பாக்கெட்’ அடித்ததற்காக போலீசார் சுமனை ஆரம்பத்தில் கைது செய்யவில்லை.
ஊரடங்கை மீறி ரோட்டில் நடமாடியதால், போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர்.
பாக்கெட்டில் மொபைல் போன் இருப்பதை பார்த்து விசாரித்து போது தான், அவனது வரலாறும், பூகோளமும் தெரிய வந்தது.
மீண்டும் கம்பி எண்ணும் அவனுக்கு, மீண்டும் பரோல் கிடைக்குமா ? என்பது தெரியவில்லை.
-லட்சுமி பிரியா