டில்லி:

பீகார் மாநிலம் புப்ரி மாவட்டத்தை சேர்ந்த இர்ஃபான் என்ற 27 வயது வாலிபரை தென்கிழக்கு டில்லி பகுதியல் பூட்டிக் கிடந்த வீடுகளின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த பொருட்களை திருடியதாக டில்லி போலீசார் கைது செய்தனர்.

இந்த திருடனுக்கு வாட்ச் மற்றும் விலை உயர்ந்த கார்கள் மீது அதீத நாட்டம். இதனால் வீடுகளில் திருடும் போது ரோலக்ஸ் வாட்ச்களை குறித்து வைத்து திருடுவது வழக்கமாக கொண்டுள்ளான். டில்லி போலீஸ் கைது செய்தபோதும் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள ஒரு பங்களாவில் திருடிய ரோலக்ஸ் வாட்சை கட்டியிருந்தார்.

திருடப்பட்ட ரோலக்ஸ் வாட்ச்களை ஒரு வியாபாரியிடம் விற்று அந்த பணத்தில் ஒரு ஹோண்டா சிவிக் கார் வாங்கியுள்ளார். தர்மேந்தர் என்ற அந்த வியாபாரியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும், இர்ஃபான் அவனது கிராமத்தில் சமூக சேவகராக அறியப்படுகிறார்.

திருடும் பணத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். 8 பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என்ற தகவலும் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கிராம மக்கள் இர்ஃபானை உஜாலா பாபு என்று தான் அழைக்கின்றனர். இவன் ஒரு திருடன் என்பதை அந்த கிராம மக்கள் நம்ப மறுத்துவிட்டனர்.

தென்கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் ரோமில் பனியா கூறுகையில்,‘‘ டில்லி மற்றும் மும்பையில் உள்ள கிளப், பார்களுக்கு இர்ஃபான் அடிக்கடி சென்று வந்துள்ளான். அங்கு ஒரு முறை ஒரு ஒலிபரப்பப்ட்ட ஒரு பாட்டு அவனுக்கு பிடித்துள்ளது. இந்த பாடலை திரும்ப பாட செய்ய பார் மேலாளருக்கு ரூ. 10 ஆயிரம் பணம் கொடுத்துள்ளான்’’ என்றார்.

மேலும், இவனுக்கு பெண் தோழி ஒருவரும் உண்டு. இவர் போஜ்புரி படங்களில் நடித்தவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவன் வேலை தேடி டில்லி வந்துள்ளான். இவன் ஆரம்பித்த கார்மன்ட் தொழில் தோல்வியில் முடிந்ததால் திருட்டு தொழிலை தேர்வு செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.