சென்னை:

பாநாயகர் தனபால்மீது தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள அதிமுக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் டிடிவி ஆதரவு 3எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சபாநாயகர் தனபால் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை  கொண்டு வந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றை திறந்து வைத்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

விரோதமும் துரோகமும் போல ஸ்டாலினும், தினகரனும் சேர்ந்துள்ளதாக கூறியவர், 3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தினகரனுக்கு தேள் கொட்டினால் ஸ்டாலினுக்கு நெறி கட்டுவதாக கூறினார்.

மேலும், ஜூன் 3-ஆம் தேதி ஆட்சி மாற்றம் வரும் என துரைமுருகன் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், சொப்பனத்தில் கண்ட அரிசி சோறாகாது என்ற பழமொழிக்கேற்ப துரைமுருகன் பேசி வருவதாக தெரிவித்தார்.

வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை  இழந்த சோகத்தில் துரைமுருகன் பேசி வருவதாகக் கூறிய  அமைச்சர், 2021-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி வரை அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், அவ்வாறு இருந்தார்  துரைமுருகன் தி.மு.க.வில் இருந்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் விலகத் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.