சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டிஉள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுகிதளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில், தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. டெல்டா மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் , காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் என்ற பகுதியில் உருவாகிறது. குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு என பல மாவட்டங்களை கடந்து தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வழியாக சேலம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதன்மூலம், டெல்டா மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாளை, திருவாரூர் உள்பட பல மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக அரசு போதுமான தண்ணீரை அணையில் திறந்து விட மறுத்து வரும் நிலையில், இயற்கை அன்னையின் கருணையால், மழை பெய்து அணைக்கு தண்ணீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.56 அடியில் இருந்து தற்போது 100.01 அடியாக உயர்ந்துள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை 72ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கான நீர்வரத்து 17,586 கனஅடியில் இருந்து 29,850 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்திற்காக 7ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வரும் நாட்களில் நீரின் வரத்தை பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.