தமிழகத்தில் வன்னியர் அரசியல் தலைமை மீள் உருவாக்கம் – ஒரு அலசல்
சிறப்புக்கட்டுரை – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்…
தமிழக தேர்தல் 2021 -க்கு பிறகாக அநேக அரசியல் விமர்சிப்பாளர்களின் பார்வையில் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல் களத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும். குறிப்பாக, அதிமுக தலைமையில் மாற்றத்தை பலரும் எதிர் பார்க்கிறார்கள். அதேபோல், தேமுதிகவின் இருப்பும் கேள்விக்குறியாகும். அனைத்திலும் முக்கியமாக பாமக தனது அரசியல் சரிவை தொடரும். அதன் நீட்சியாக, அதன் அரசியல் இருப்பே கேள்விக்குறியாகும். வட தமிழகத்தில் வன்னியர் சமூகத்தின் மீதான அதன் ஆளுமை முற்றிலுமாக தகரும் போலத்தான் தெரிகிறது.
திராவிட முன்னேற்ற கழகம், கவர்ச்சியான, இளமையான வன்னிய மாற்று தலைமைகளை கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு உருவாக்க தொடங்கியது. அதுவரையிலும் தமது இயக்கத்தில் முதிர்ந்த வன்னிய ஆளுமைகளான துரைமுருகன், MRK .பன்னீர்செல்வம் போன்று, இளம் வன்னிய தலைமையை தேட தொடங்கியது. அதைபோல், வலுவான, இளமையான துடிப்பான ஒரு அரசியல் ஆளுமையை தேடி கண்டுபிடிக்கவும் செய்தது.
தர்மபுரி,பாராளுமன்ற தேர்தலில் Dr.செந்தில் குமார் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை அவரும் மிக சரியாக பயன்படுத்தி வலுவான அன்புமணி ராமதாஸ் அவர்களையே வென்று நிரூபித்தார். அதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்குமான எதிர் நடவடிக்கைகளை Dr.செந்தில் குமார் அவர்கள் மூலமாகவே முன்னெடுத்தனர். மேலும், கட்சியின் இணையதள செயல்பாட்டால் பல இளம் உறுப்பினர்களை அவர் கட்சியின்பால் கவர்ந்தார். அவருடைய சாதுர்யமான செயல்பாட்டால் கட்சி கடந்தும் பலரது நன்மதிப்பை பெற்று கட்சியின் பிம்பத்தையும் படித்தோர் மற்றும் வாக்காளர் மத்தியில் உயர்த்தியுள்ளது.
கட்சியின் தலைமையும், மங்கிவரும் பாமகவின் செல்வாக்கை கருத்தில் கொண்டு வன்னிய வாக்கு வங்கியை குறிவைத்து Dr.செந்தில் குமாரை முன்னிலைபடுத்தி ஒரு ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்கிறது. அதன் மூலமாக வன்னிய இளைஞர்களுக்கு ஒரு இளம் தலைமையை அடையாளம் காட்டுகிறது.
மேலும், வன்னிய சமூகத்தில் சிலர் ராமதாஸ் அவர்கள் காடுவெட்டி குரு அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் துரோகம் இழைத்ததாக நம்புகிறார்கள். பாமகவிற்காகவும் ராமதாஸ் அவர்களுக்காகவும் காடுவெட்டி குரு அவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் கடுமையாக எதிர்த்தார். அதனால், அவர் பல வழக்குகளை சந்திக்க வேண்டியதாயிற்று. வழக்குகளின் அலைக்கழிப்பால், அவருடைய உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், காடுவெட்டி குரு அவர்களுக்கான உரிய மருத்துவத்திற்கு பாமக தலைமை உதவவில்லை என்பது காடுவெட்டி குரு குடும்பத்தார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு. இதை, சட்டசபை தேர்தல் களத்தில் மிக சாதுர்யமாக திமுக பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டது. காடுவெட்டி குரு அவர்களின் மகள் மற்றும் மருமகன், வட தமிழகம் எங்கும் பாமக போட்டியிட்ட இடங்களில் கடுமையான எதிர் பிரச்சாரம் செய்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக, தேர்தலுக்கு பிறகாக அனேகமாக மறைந்த காடுவெட்டி குரு அவர்களின் குடும்பத்தில் இருந்து ஒருவர் திமுகவில் இணைக்கப்பட்டு முக்கிய பொறுப்பு பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம், திமுக தமது கட்சியில் போதிய வன்னிய தலைமைகளை வளர்த்து பாமகவிற்கு சவாலாக நிற்கும். இது, இரண்டு சகாப்தமாக ராமதாஸ் பின்னால் சென்று வன்னிய சமூகத்தினர் இழந்த அரசியல் முக்கியத்துவத்தை மீண்டும் பெறுவதற்கு பேருதவியாக இருக்கும்.
10 .5 % உள் ஒதுக்கீட்டில் ராமதாஸ் அவர்கள் செய்த நாடக அரசியல் அவருடைய செல்வாக்கை தேர்தலுக்கு பிறகாக கணிசமாக குறைக்கும். ராமதாஸ் அவர்களின் ஒருமித்த வன்னிய தலைமை என்ற பிம்பத்தை வேல்முருகன் அவர்களும் கடுமையான மற்றும் நேர்மையான பிரச்சாரங்களின் வாயிலாக உடைத்தார். சிதைந்த வன்னிய தலைமை மற்றும் அதன் வாக்கு வங்கியை குறிவைத்து திமுக செயல்படுவதை போலவே அதிமுகவும் காங்கிரசும் செயல்பட கூடும். ஆனால், அதிமுகவில் சி.வீ.சண்முகம் அப்படி ஒரு வலுவான இளம் வன்னிய தலைமையை உருவாக சுயநலம் கருதி விடமாட்டார். மேலும், தேர்தலுக்கு பின்னாக அதிமுகவின் கட்சியின் தலைமைக்குள்ளாக பல பிரச்சைனைகள் எதிர்கொள்ளவேண்டி இருப்பதனால், அவர்கள் கட்சி வளர்ச்சி குறித்து சிந்திக்க போவதில்லை.
காங்கிரஸ் பேரியக்கம் மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவரான வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் மறைவுக்கு பின்னாக ஒரு வலுவான வன்னிய தலைமையை அடையாளப்படுத்த முடியாமல் இருந்தது. தற்போது, மறைந்த வாழப்பாடி இராமமூர்த்தி அவர்களின் மகன்களில் ஒருவரான வாழப்பாடி இராம சுகந்தனை முன்னிலை படுத்துகிறது. ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் கமிட்டியில் துணை தலைவராக உள்ள அவருக்கு, சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னாக மேலும் முக்கியத்துவம் கொடுத்து வன்னிய வாக்குகளை குறிவைத்து ஒரு வலுவான இளமையான வன்னிய அரசியல் தலைமையை உருவாக்கலாம். இதன் மூலமாக அவர்கள் இழந்த வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி, அன்பரசு, கிருஷ்ணஸ்வாமி போன்ற வன்னிய தலைமைக்கு ஈடாக வாழப்பாடி இராம சுகந்தன் அவர்களை முன்னிலை படுத்தும். குறிப்பாக, வாழப்பாடி இராம சுகந்தன் அவர்களின் சமூக செல்வாக்கை காங்கிரஸ் பயண்படுத்தி இழந்த வாக்கு வங்கியை மீள கைபற்ற முயலும் என்றே தோன்றுகிறது.
தேமுதிக வும், மதிமுகவும் அரசியலில் தேய்பிறையில் உள்ளதால் அவர்கள் இந்த வாக்கு வங்கி அரசியலை குறிவைத்து காரியம் ஆற்றும் நிலையில் இல்லை. கமலின் மநீம இனி அடுத்த தேர்தலுக்குதான் கடை விரிப்பார்கள். ஆதலால், அவர்கள் இந்த போட்டியில் இல்லை. சீமானின் நாம் தமிழர் கட்சி, தேர்தலுக்கு பிறகு, வலுவாக குறிவைத்து அரசியல் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். அனேகமாக, அவர்கள் தற்காப்பு இருப்பு உறுதிப்படுத்தும் அரசியல்நிலைக்கு தள்ளப்படுவார்கள், ஆகையால் அவர்களால் ஆக்கபூர்வ அரசியலை இனிவரும் காலங்களில் முன்னெடுக்க இயலாது.
இச்சூழலில், வன்னிய வாக்கு வங்கியை குறிவைக்கும் போட்டியில் திமுகதான் முன்னணியில் உள்ளது. இருந்தாலும், காங்கிரஸ் சுதாரித்து தனது அரசியல் நிலை நிறுத்தத்திற்காக துரிதமாக செயல்படும் என்று எதிர்பார்க்கலாம். தேர்தலுக்கு , பின்னாக தமிழக அரசியல் களம் முன்பைவிட அதி தீவிரமாக செயல்படும் என்றால் அது மிகையாகாது. அதில், வன்னியர் வாக்கு வங்கியை நோக்கிய அரசியல், பிரதானமாக இருக்கும். அதன் பயனாக, புதிய இளைய வன்னிய தலைமைகள் அடையாளப்படுத்தப்பட்டு முன்னிலைப்படுத்தப் படலாம். அதுவே அரசியல்.