கொரோனா பரவலையடுத்து, 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் வழியில் வாக்களிக்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது தேர்தல் கமிஷன். இதற்கு முன்னதாக, மாற்று திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் அந்த வசதி அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது, கொரோனாவால், 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வயதினருக்கென்று தனியாக ஒரு வாக்குச்சாவடி அமைப்பதைக் காட்டிலும், இந்த ஏற்பாடு பரவாயில்லை என்று கூறப்படுகிறது.
நேரில் வந்து வாக்களிக்க இயலாதவர்களுக்கு, அவர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வாய்ப்பளிப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், இதேயளவு அக்கறை இந்திய மக்கள்தொகையில் இன்னொரு பிரிவின் மீதும் செலுத்தப்பட வேண்டும். அந்த ஒரு பிரிவினர்தான் புலம்பெயர் தொழிலாளர்கள்!
கடந்த 2017ம் ஆண்டின் பொருளாதார சர்வேயின்படி, நாட்டிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 13.9 கோடி. கட்டட வேலை, வீட்டு வேலை, செங்கற் சூளை, சுரங்க வேலை, போக்குவரத்து துறை, பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவதற்காக இவர்கள் நாடு முழுவதும் பயணிக்கின்றனர்.
இவர்களில் பலர் தங்களின் சொந்த இடங்களுக்கே திரும்புவதில்லை மற்றும் தங்களின் வேலை முடிந்ததும் திரும்பவும் விரும்புவதில்லை. தாங்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு கிடைக்கும் குறைந்த ஊதியம், மோசமான வாழ்க்கை வசதிகள், அங்கீகாரம் கிடைக்காமை உள்ளிட்டவை, அவர்கள் தேர்தல் நேரங்களில் தங்களுடைய வாக்குரிமையை செலுத்துவதிலிருந்து தடை செய்கின்றன.
இதனால் அவர்கள் மறக்கப்பட்ட வாக்காளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தேர்தல் சமயத்தில் அவர்கள் ரிஸ்க் எடுத்து, தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்து வாக்களிக்கப் போவதில்லை என்ற தைரியமே, அவர்கள் தொடர்பாக மாநில மற்றும் மத்திய அரசுகள் அலட்சியம் காட்ட காரணம்.
தங்களின் தங்குமிட ஆதார ஆவணங்களைப் பெற முடியாத காரணத்தால், புலம்பெயர் தொழிலாளர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களில் வாக்காளர்களாக பதிவுசெய்ய முடிவதில்லை. பல சீசன் சார்ந்த தொழிலாளர்களுக்கு, வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் தமது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வாக்களிப்பார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைசெய்யும் மாநிலத்திலும் வாக்குரிமை இல்லாத காரணத்தால், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள், அங்கும் எளிதாகப் புறக்கணிக்கப்படுகின்றன.
இந்தியாவில், தற்போதைய நிலையில், மொத்தம் 91.05 கோடி பேர் வாக்காளர்களாக பதிவுசெய்துள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், மொத்தம் 61.36 கோடி பேர் வாக்களித்தனர். அதாவது மொத்தமாக 67.4%.
வாக்காளர்களில் 10% பேர், ஆர்வமின்மையால் வாக்களிக்க விரும்புவதில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்களில் குறைந்த அளவினர் மட்டுமே வாக்களிக்க பதிவுசெய்துள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 25000 பேர் வாக்களித்தனர். இந்நிலையில், அவர்கள் தங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போது, வெளியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், மின்னணு முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குமுறையின் மூலமும், ராணுவத்தில் பணியாற்றுவோர், தங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் வாக்களிக்க முடியும். ஆதார் இணைக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை முறையின் மூலம், அவர்கள் வெளியில் இருப்பவர்கள் தங்கள் வாக்குகளை டிஜிட்டல் முறையில் பதிவிடும் செயல்பாட்டை தேர்தல் கமிஷன் பரிசோதித்து வருகிறது.
இந்த புதிய முறையை மேம்படுத்துகையில், ஆதார் இணைப்பானது, தகுதியுள்ள வாக்காளர்களை வெளியேற்றுவதாக இருத்தல் கூடாது.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பதை எளிமைப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களின் ஒருங்கிணைப்பை தேர்தல் கமிஷன் பயன்படுத்த வேண்டும். ‘ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’ மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் பொது விநியோகத் திட்டத்தில் பயனடைதல் சாத்தியப்படுத்தப்படும் நிலையில், வாக்களிப்பது ஒரு ஜனநாயக கடமை என்றில்லாமல், ஜனநாயகக் கடமையாக கருதப்பட வேண்டும்.
எனவே, ‘ஒரு நாடு ஒரு வாக்காளர் அடையாள அட்டை’ என்ற முறையில், புலம்பெயர் வாக்காளர்களின் வாக்களிப்பு உரிமையை சாத்தியப்படுத்த வேண்டும். இந்த நடைமுறையின் மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்த தொடங்கிவிட்டால், அரசுகள் அவர்களை நடத்தும் விதத்தில் நாம் மாற்றத்தைப் பார்க்கலாம்.
நன்றி: த இந்து