பெங்களூரு: ஆசிபி அணியின் ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கும், 47 பேர் காயமடைந்ததற்கும் காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? என்ற  பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளின் மனக்குமுறல் நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக வெற்றியை பெற்றுள்ள  விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிப்பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், 47 பேர்  காயமடைந்ததுள்ளனர். இந்த அசம்பாவிதங்களுக்கு காரணம், ஆர்சிபி அணியினரும், சித்தராமையா தலைமையிலான  மாநில  காங்கிரஸ் அரசும்தான் என  காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

18வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியின் 18 ஆண்டு கனவு இதன்மூலம் நனவான நிலையில்,  கர்நாடாக மாநில ரசிகர்கள் கடந்த இரு நாட்களாக  படு உற்சாகத்துடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்சிபி வெற்றிவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில்,   மே 4ந்தேதி மாலை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணியை பிரமாண்டமானமுறையில்  வரவேற்க பிரம்மாண்ட கோலாகல ஏற்பாடுகளை அம்மாநில அரசு மேற்கொண்டது. பெங்களூரு வந்த ஆர்.சி.பி. அணி வீரர்களை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் ஆகியோர் நேரில் வரவேற்று பாராட்டுகளை தெரிவித்தனர்.

 இந்த ஐபிஎல் வெற்றிவிழா நடைபெற்ற சின்னசாமி ஸ்டேடியத்தில் அதிகபட்சமாக சுமார் 40ஆயிரம் பேர் இருக்க முடியும்.   ஆனால் பெங்களூரு  சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 11 பேர் பலி, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சோக நிகழ்வுக்கு கர்நாடக மாநில அரசு உள்பட  ஆர்சிபி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் என பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,   இந்த சோகத்துக்கு காரணம்,  காவல்துறையினரின் ஆலோசனையை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு புறக்கணித்ததே என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மைதானத்திற்குள் நுழைவு சீட்டை பெறாதவர்களும் நுழைய முற்பட்டதே இந்த நெரிசலுக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மைதானத்தின் 3, 10, 21 ஆகிய நுழைவு வாயிலில் தான் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கவலை தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றதே இந்த சோக சம்பவம் அரங்கேற காரணம் என அவர் கூறியுள்ளார். அதேவேளை, கர்நாடாகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு மீது பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளத அரசின் நிர்வாக தவறே இந்த சோக சம்பவம் அரங்கேற காரணம் என பாஜக சாடியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடகா துணை முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எம் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததால்  நேற்று (புதன்கிழமை)  ஆர்சிபியின் ஐபிஎல் 2025 வெற்றி கொண்டாட்டம் ஒரு கனவாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,   அதை கண்டுகொள்ளாமல், மைதானத்திற்குள் இருந்த ஆட்சியாளர்களும், ஆர்சிபி வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும், தங்களது  கொண்டாட்டங்களைத் தொடர்ந்தனர். இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பாக எந்தவித வருத்தமும் இன்றி கொண்டாட் டங்கள்  விமரிசையாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,    ஆர்சிபி அணியினரும், மாநில அரசும்,   பெங்களூரு காவல்துறையின் ஆலோசனையை நிராகரித்ததுதான் இந்த சோகத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு உஎழுந்துள்ளது. இதுதொடர்பாக பிரபல நாளிதழான  டெக்கான் ஹெரால்டு அறிக்கையின்படி, ஆர்சிபி கொண்டாட்டங்களை குறுகிய காலத்தில் நடத்த வேண்டாம் என்று மூத்த காவல்துறை அதிகாரிகள், மாநில காங்கிரஸ் அரசுக்கு அறிவுறுத்தியதுடன்,  ஒரு வாரம் கழித்து  வெற்றி விழாவை நடத்தலாம் என கூறிய நிலையில், அதை புறக்கணித்து சூட்டோடு சூடாக உடனே நடத்த வேண்டும் என்று பிடிவாதமாக நடத்தியதாகவும், காவல்துறையினரின்  ஆலோசனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சோக நிகழ்வுக்கு பிசிசிஐ பொறுப்பேற்க வேண்டும் என சிலர் வலியுறுத்தி வரும் நிலையில்,  ‘BCCI எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?’ என கேள்வி எழுப்பியுள்ள பிசிசிஐ,  RCBயின் பெங்களூரு நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு நாங்கள் காரணம் இல்லை, நாங்கள் இந்த விஷயத்தில் மாநில கிரிக்கெட்  ​​வாரியத்தை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய பெயர் குறிப்பிடப்படாத ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறும்போது, இந்த கொண்டாட்டம் தொடர்பாக,  அரசாங்கத்தையும் RCB அணியிடமும், உடனே நடத்த வேண்டாம் என  ஊக்கப்படுத்த முயற்சித்தோம்.   மேலும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களிடையே வெற்றி கொண்டாட்ட  உணர்ச்சிகள் தணிந்திருக்கும் போது நிகழ்வை நடத்த பரிந்துரைத்தோம். ஆனால் அது ஏற்கப்படவல்லை.

அவர்கள், வெற்றி விழா பேரணியை  தான சவுதாவிலிருந்து ஊர்வலத்தை நடத்துவதாகவும், பின்னர் பாலேகுந்திரி வட்டம், பின்னர் கப்பன் சாலை, எம்ஜி சாலை மற்றும் குயின்ஸ் வட்டத்திற்கு அருகிலுள்ள சின்னசாமி மைதானம் வரை ஊர்வலத்தை நடத்துவதாகவும் ஆரம்பத்தில் திட்டமிட்டடிருந்தனர். ஆனால், நாங்கள்  “எந்த ஊர்வலத்தையும் நடத்த வேண்டாம், ஆனால் ஒரு இடத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடத்த வேண்டும் என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம். வீரர்களை மைதானத்திற்கு அழைத்து வந்து அங்கேயே முடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினோம்,

ஆனால் மாநில அரசும் RCBயும் காவல்துறையின் அறிவுரையை கவனிக்கவில்லை. “வீரர்கள், குறிப்பாக வெளிநாட்டினர், இன்று அல்லது நாளை வெளியேறுவார்கள், அதனால் உடனே கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்பதே  அவர்களின் வாதமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

பொதுவாக இதுபோன்ற விழாக்கள் மூலம்,  அரசாங்கம்   அதிக லாபம் ஈட்ட விரும்பும். அதேதான் தற்போதும் நடந்துள்ளது. எங்களின் ஆலோசனை ஏற்று, இந்த கொண்டாட்டத்தை உடனே நடத்த அனுமதி தர அரசாங்கம் மறுத்திருந்தால், இந்த துயரம் ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.

மற்றொரு அதிகாரி, “செவ்வாய்க்கிழமை, காலை 5.30 மணி வரை, எங்கள் ஊழியர்கள் – போலீஸ் கமிஷனர் முதல் கான்ஸ்டபிள்கள் வரை – தெருக்களில் நின்று முற்றிலும் சோர்வடைந்திருந்தனர். இது முழு பைத்தியக்காரத்தனம். இதுபோன்ற ஒரு வெறித்தனத்தை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை” என்று தெரிவித்தார்.

காவல்துறையினரின் ஆலோசனை கேட்காமல், தான்தோன்றித்தனமாக மாநில அரசும், வெற்றிக்களிப்பில் திளைத்த  ஆர்சிபி அணியினரும் நடந்துகொண்ட விதமே , இந்த பேரழிவுக்கும், பெரும் சோகத்துக்கும் காரணம்  என்று  பெரும்பாலான காவல்துறையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு முறையான நேரம் கொடுத்து,  விழாவுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும்  முன்னேற்பாடுகள் செய்து விழாவை நடத்தியிருந்தால், எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என்றும் காவல்துறையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இவ்வாறு டெக்கான் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

நன்றி: டெக்கான் ஹெரால்டு