டில்லி
இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள உபரி நிதியில் ரூ,1,76,051 கோடியை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது.
சர்வதேச அளவில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களிடம் 13% உபரி நிதியை வைத்துக்கொண்டு மீதம் உள்ள தொகையை அரசுக்கு அளிப்பது வழக்கமாகும். நம் நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தன்னிடம் 28% உபரி நிதியை வைத்துக் கொண்டு மீதமுள்ளதை மத்திய அரசுக்கு அளித்து வந்தது. மத்திய அரசு பிறநாடுகளின் செயல்பாடுகலையும் நிதிப் பற்றாக்குறையையும் சுட்டிக் காட்டி கூடுதல் நிதியை ரிசர்வ் வங்கியிடம் கோரியது.
ரிசர்வ் வங்கி அந்த கோரிக்கையை நிராகரித்ததால் மத்திய அரசுக்கும் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதனால் தனக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் அப்போது நாடெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையொட்டி மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கிக்கும் இடையே உள்ள பிரச்சினையைத் தீர்க்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜவான் தலைமையிலான இந்தக் குழு வங்கியின் உபரி நிதியை மத்திய அரசுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அளிக்கலாம் எனப் பரிந்துரைத்தது. இந்தக் குழு சென்ற வருடம் அமைக்கப்பட்டதாகும். நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பிமல் ஜவான் குழுவின் அறிக்கை குறித்த ஆலோசனை நடந்தது.
கூட்ட முடிவில் ரிசர்வ் வங்கியின் உபரித்தொகை ரூ.1,23,414 மற்றும் திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டுக் கட்டமைப்பின் கீழ் உள்ள உபரித்தொகை ரூ.52,637 ஆகியவை இணைந்து மொத்தம் ரூ. 1,76,051 கோடி மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.