டில்லி

செல்லாத நோட்டுக்களை எண்ணும் பணி இன்னும் நடந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம்  நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்தார்.    அப்போது 1716 கோடி ரூ.500 நோட்டுக்களும் 685 கோடி ரூ. 1000 நோட்டுக்களும் புழக்கத்தில் இருந்ததாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.  அதன் மொத்த மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடிகள் என சொல்லப்பட்டது.

அந்த சமயத்தில் மக்களுக்கு செல்லாத நோட்டுக்களை மாற்றுவதில் பெரும் சிரமம் உண்டானது.    சுமார் 100 பேர் இதனால் மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.    அத்துடன் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களும் புதிய நோட்டுக்களும் போதுமான அளவில் இல்லாததால் பல வர்த்தகங்கள் பெரிதும் அடி வாங்கின.

இது நடந்து 15 மாதங்கள் ஆகி விட்டன.   ஆயினும் இன்னும் செல்லாத நோட்டுக்களை எண்ணும் பணி முழுமை அடையவில்லை என தெரிய வந்துள்ளது.   இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி எழுப்பப் பட்டது.

அதற்கு, ”கடந்த 2017ஆம் வருடம் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை செல்லாத நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டன.   அதன் மதிப்பு சுமார் 15.28 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.   உண்மையான மதிப்பு முழுவதுமாக எண்ணப்பட்ட பிறகே தெரியவரும்”  என ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

ஆனால் இன்று வரை இந்த செல்லாத நோட்டுக்களை எண்ணும் பணி எப்போது முடிவடையும் என்பதை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.