டில்லி
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வியகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்
கடந்த 2016 ஆம் வருடம் பாஜக அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி விலகினார். அதன் பிறகு பாஜக அரசு உர்ஜித் படேலை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்தது. இவர் மத்திய அரசுக்கு சாதகமாக நடப்பார் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் போகப் போக ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து விரோதம் உண்டானது.
உர்ஜித் படேலின் உதவியாளர் விரல் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் தனித்தன்மையில் குறுக்கிடுவதாக வெளிப்படையாக தெரிவித்ததால் இந்த விரோதம் மேலும் மோசமான நிலைய அடைந்தது. இதையொட்டி நடந்த பல நிகழ்வுகளின் விளைவுகளாக உர்ஜித் படேல் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கி கையிருப்பு தொகையில் ஒரு பகுதியை அரசுக்கு அளிக்க படேல் மறுத்தது இந்த மோதலுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது உர்ஜித் படேலுக்கு பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்ற சக்தி காந்த தாஸ் அரசுடன் ஒருமித்த கருத்து கொண்டிருந்ததால் ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் தற்போது சுமுக நிலை நிலவி வருகிறது.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான உர்ஜித் படேலுக்கு தற்போது மத்திய அரசுடன் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதை நிரூபிப்பது போல அரசின் முக்கிய பதவியான தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வியக தலைவர்களில் ஒருவராக வரும் 22 ஆம் தேதி முதல் உர்ஜித் படேல் பொறுப்பு ஏற்கிறார். இந்த கல்வியகம் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இது குறித்து ஒரு பொருளாதார நிபுணர், “அரசின் ஒப்புதல் இல்லாமல் உர்ஜித் படேலுக்கு இந்த கல்வியக தலைவர் பதவி அளிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த கல்வியகம் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. எனவே படேல் இறுதியாக அரசுடன் சமாதானமாகப் போகச் சம்மதித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. காலம் எந்த ஒரு காயத்தையும் குணப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.