டில்லி
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரு மாபெரும் நிர்வாகத் தவறு என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் விமர்சித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று இரவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். அன்று இரவு 12 மணி முதல் அதிக மதிப்பு நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவை ஆகின. இந்த நோட்டுக்களை மாற்ற மக்கள் நீண்ட நெடும் வரிசையில் நிற்க நேரிட்டது.
அத்துடன் குறைந்த அளவிலான பணம் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டதால் நாட்டில் பணப்பற்றாக்குறை அதிக அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரங்கராஜன் சமீபத்தில் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் அந்தப் பேட்டியில், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்புப் பண ஒழிப்புக்காக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதைச் சரியாகக் கையாளவில்லை.
இது ஒரு மாபெரும் நிர்வாகத் தவறு என நான் கருதுகிறேன். போதுமான அளவு புதிய நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டிருந்தால் எந்த ஒரு குழப்பமும் இருந்திருக்காது. ஆனால் போதுமான அளவு நோட்டுக்கள் இல்லாத நிலையில் பழைய நோட்டுக்களை மக்கள் அளிக்க வேண்டி இருந்தது.
எனவே குறைந்த வருமானமுள்ள பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிந்ததா இல்லையா என்பதை விட இந்த நடவடிக்கையைச் சரியாகக் கையாளவில்லை என்பதே உண்மையாகும். இது ஒரு பெரிய பொருளாதார பேரழிவை உண்டாக்கி உள்ளது.” எனக் கூறி உள்ளார்.