புதுடில்லி: ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து ரவிச்சந்திர அஸ்வினை, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 1.5 கோடிக்கு மாற்றப்படுவதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கு பதிலாக கர்நாடக சுழற்பந்து வீச்சாளர் சுஜித் பஞ்சாப் அணிக்கு வரவுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் அணிக்கு கேப்டனாக ரவிச்சந்திர அஸ்வின் நியமிக்கப்பட்டார். 2018-ம் ஆண்டில் பஞ்சாப் அணி 7-வது இடத்திலும், 2019-ம் ஆண்டில் 6-வது இடத்துக்கும் முன்னேறியது.
ஆனாலும், ரவிச்சந்திர அஸ்வின் செயல்பாடு மனநிறைவு அளிக்கும் வகையில் இல்லாததால் அவரை அணியில் இருந்து கழற்றிவிட்டுவிட்டு வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது.
மேலும், அணிகளுக்கு இடையே பரஸ்பர வீரர்கள் பரிமாற்ற அடிப்படையில் அஸ்வினை மாற்றிக் கொள்ளவும் பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, அஸ்வினைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக இரு வீரர்களை தர டெல்லி கேபிடல்ஸ் அணி முன்வந்துள்ளது. அவர்கள் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் மற்றும் கர்நாடக சுழற்பந்து வீச்சாளர் சுஜித் ஆகியோருமே. இதற்கான பேச்சும் நடந்து முடிந்தது.
அதேவேளை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வினை மாற்றுவதற்கு அணியின் செயல் இயக்குநர் அணில் கும்ப்ளே மறுத்துவிட்டார் என்று செய்திகள் கூறின.
இதுகுறித்து அனில் கும்ப்ளேவிடம் கேட்டபோது, ” எந்தவிதமான முடிவும் இப்போதுள்ள நிலையில் எடுக்கவில்லை. ஆனால், அதற்கான பேச்சுகள் நடந்து வருகின்றன. இன்னும் அணியில் எந்தெந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் என்னிடம் வரவில்லை. சில வீரர்களைத் தக்கவைக்கவும், சில வீரர்களை மாற்றிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அது யாரென்பது விரைவில் தெரியும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் நிருபரிடம் கூறுகையில், “டெல்லி அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே வீரரை மாற்றும் பேச்சு முடிந்துவிட்டது. பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வின் டெல்லி அணிக்கு வருகிறார். எங்கள் அணியில் இருந்து இரு இளம் வீரர்களை பஞ்சாப் அணிக்கு வழங்குகிறோம். அந்த இளம் வீரர்கள் குறித்து பேச்சு நடந்து வருகிறது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
அஸ்வின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குச் சென்றுவிட்டால், பஞ்சாப் அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதேசமயம், அஸ்வின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குச் சென்றாலும், அந்த அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யரே தொடர்ந்து இருப்பார் எனவும் தெரியவருகிறது.
இதுகுறித்து பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் கூறும்போது “இந்த ஒப்பந்தத்தில் எல்லோர்க்குமே மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி, அஸ்வினுக்கும் மகிழ்ச்சி மற்றும் டெல்லிக்கும் மகிழ்ச்சி. நாங்கள் மூன்று அணிகளுடன் பேச்சு நடத்தி வந்தோம், இறுதியில் இந்த முடிவுக்கு வந்தோம். அஸ்வினுக்கு அனைத்தும் நன்றாக அமைய வாழ்த்துகிறோம்”, என்றார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 14 இல் முடிவடையும் ஐபிஎல் மாற்றங்களுக்கான காலத்திற்கு முன்பு நிகழுமென தெரிகிறது. அஸ்வினின் தலைமையில் பஞ்சாப் அணி நிறைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. 2008 இல் நடைபெற்ற ஐபிஎல் லில் அது அரையிறுதி வரை சென்றது. 2014 ஐபிஎல் லில் அது பைனலுக்கு சென்றது.
தென்னாப்பிரிக்காவுக்காவுக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் மீண்டும் களம் கண்ட அஸ்வின் மிக வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுமிருந்தார்.