மும்பை: தனக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டுமென்று எழும் கோரிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ள ரத்தன் டாடா, இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைப்பதில் தான் மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஒரு பிரிவினர், சமூக வலைதளங்களில் ரத்தன் டாடாவிற்கு, இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரத்தன் டாடா, “சில தரப்பு மக்களால், எனக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுக்கப்பட வேண்டுமென்று சமூகவலைதளங்களில் எழும் கோரிக்கைக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், அந்தப் பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டுமென்பதுதான்.
ஒரு இந்தியனாக இருப்பதை நல்வாய்ப்பாக உணரும் நான், நாட்டின் வளர்ச்சி மற்றும் வளத்திற்காக பங்களிக்க முயல்கிறேன்” என்றுள்ளார்.
ஹாவர்டு பல்கலையில் படித்த ரத்தன் டாடாவிற்கு, தற்போது 83 வயதாகிறது. இவர் தலைமையில், டாடா குழுமம் பெரியளவு வணிக வளர்ச்சியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.