தனது அறிமுகப் போட்டியிலேயே 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய உலகின் 4வது கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்.
வங்கதேச அணிக்கெதிராக தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை செய்துள்ளார் அவர்.
ஆஃப்கானிஸ்தான் பேட்டிங்கின்போது வெறும் 61 பந்துகளில் 51 ரன்களை எடுத்தார் அவர். இதில் 3 பெரிய சிக்ஸர்கள் அடக்கம்.
இதற்கு முன்பாக, இங்கிலாந்து கேப்டனாக இருந்த ஷெல்டன் ஜேக்ஸன் 1905ம் ஆண்டும், பாகிஸ்தான் கேப்டனாக இருந்த இம்ரான்கான் கடந்த 1982ம் ஆண்டும், வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 2009ம் ஆண்டு இதே சாதனையை செய்தவர்கள்.
அந்த வரிசையில் தற்போது நான்காவதாக இணைந்துள்ளார் ரஷீத் கான். அதேசமயம் இந்த சாதனையை செய்த மிக இளம்வயது கேப்டன் ரஷீத் கான் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.