நந்தீஸ்வரர் பற்றிய சில அபூர்வ தகவல்கள்

சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்னர் தான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும்.
கொடிமரத்திற்கும், நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும்.
இந்த நந்தியை அதிகார நந்தி என்பார்கள். இவர் பூவுலகில் கடுமையாகத் தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர். சிவகணங்களின் தலைவர்.
நந்தியானவர் சிலதிருத்தலங்களில் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்றே விலகியபடி காட்சியளிப்பார்.
அப்படிப்பட்ட தலங்கள் திருப்பூங்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும். இவற்றில் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமாகக் காணப்படுகிறார், வட ஆற்காடு மாவட்டம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவில் உள்ள நந்தி.
இவர் இறைவனுக்குப் புறமுதுகு காட்டியபடி, நின்ற நிலையில் காணப்படுகிறார். இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது.
ஒருமுறை கோவில் அர்ச்சகர், ஸ்வாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வந்தபோது அவரை கஞ்சன் என்ற அரக்கன் வழி மறித்துத் துன்புறுத்தினான்.    அர்ச்சகர், இறைவனிடம் முறையிட, இறைவனோ நந்திக்கு, கண்ணால் உத்தரவிட்டார். நந்தியெம்பெருமான் உடனடியாக அசுரனை அடித்துத் துரத்தினார். மீண்டும் அசுரன் வருகிறானா? என்பதைப் பார்ப்பதற்காகவே நந்தியெம்பெருமான் கோவிலின் வாசலை நோக்கிய வண்ணம், இறைவனுக்குப் புறமுதுகு காட்டி நிற்பதாகக் கூறுகிறார்கள்.
இதே போல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள்புரியும் சிவன் கோவில்கள் மிகவும் போற்றப்படுகின்றன.
சிவராத்திரியின் போதும் பிரதோஷ காலத்தின் போதும் இறைவனுடன் அங்கு அருள்பாலிக்கும் நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பர்.
விஷ்ணு நந்தி :-
சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும்.
அது ‘மால்விடை’ எனப்படும் விஷ்ணு நந்தி. திரிபுர சம்கார காலத்தில், திருமாலே நந்தியாக வடிவம் எடுத்து சிவபெருமானைத் தாங்கியதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை ‘ப்ராஹார நந்தி’ என்பார்கள்.
தரும நந்தியெம்பெருமான் :-
சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி, ‘தர்ம நந்தி’ எனப்படுவார்.
இந்த நந்தியின் மூச்சுக்காற்று ஸ்வாமியின் மீது பட்டுக் கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் ஸ்வாமிக்கும் இடையே செல்லக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லும்.
பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மஹா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என்பனவாகும்.
இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீ சைலம் ஆகிய ஸ்தலங்களில் தரிசிக்கலாம்.
வாசலை நோக்கிய படியுள்ள நந்தியெம்பெருமான் :-
கும்பகோணம் அருகில் உள்ளது திருவைக்காவூர் வில்வவனேஸ்வரர் கோவில்.
இங்குள்ள நந்தியெம்பெருமான், கோவில் வாசலை நோக்கியபடி காட்சி தருகிறார். ஒரு முறை வேடன் ஒருவன் ஆலயத்திற்குள் வந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவனது உயிரைப் பறிப்பதற்காக எமதருமன் ஆலயத்திற்குள் வந்தார். அவரை நந்தியும், த்வார பாலகர்களும் தடுக்க எமதருமன் திரும்பிச் சென்றார். மீண்டும் எமன் கோவிலுக்கு வராமல் தடுக்கவே நந்தியெம்பெருமான் வாசலை நோக்கிப் பார்த்தபடி இருப்பதாகக் கோவில் வரலாறு கூறுகிறது.
வெள்ளநீரை உறிஞ்சிய நந்தியெம்பெருமான் :-
விருத்தாசலத்திற்கு மேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடம். இங்குள்ள ஆலயத்தில் கொழுந்தீசர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
ஒரு முறை பெண்ணாடத்தில் கடும் மழை தொடர்ந்து பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர் மக்கள் இறைவனை வேண்டவே, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும்படி ஆணையிட்டார். உடனே நந்தியெம்பெருமான் கிழக்குப் பக்கமாக வாசலை நோக்கித் திரும்பி, வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து இக்கோவிலில் நந்தியெம்பெருமான் ஆலய வாசலை நோக்கியபடியே உள்ளார்.