புளோரிடா

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் அரிய நிகழ்வாக மின்னல் தாக்கி இரு ஒட்டகச்சிவிங்கிகள் மரணம் அடைந்துள்ளன.

மாதிரி புகைப்படம்

புளோரிடா மாகாணத்தில் ஒரு விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. அதில் ஒரு மனமகிழ் பூங்கா மற்றும் வனவிலங்குகளை வாகனம் மூலம் அருகில் சென்று காணும் வசதிகள் உள்ளன. இந்த சரணாலயத்தில் பல விலங்குகள் வசித்து வருகின்றன. அவைகள் புயல், மழை சூறாவளிக் காலத்தில் தங்க சிறப்பு தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 6 வாரங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கடும் புயலுடன் கூடிய மழை பெய்தது. இடி, மின்னலால் விலங்குகள் மிகவும் துயரடைந்தன. ஆனால் அந்த விலங்குகளுக்கு இம்மாதிரி வேளைகளில் சிறப்பு தங்குமிடங்களுக்கு செல்ல வேண்டும் என்பது தெரியாமலிருந்ததால் மழையில் சிக்கி மிகவும் துன்பம் அடைந்தன.

இந்த புயல் மழையில் இரு ஒட்டகசிவிங்கிகள் மின்னல் தாக்கி மரணம் அடைந்துள்ளன. லில்லி என பெயர் கொண்ட 10 வயது பெண் ஒட்டக சிவிங்கியும் ஜியோனி என்னும் 1 வயது ஆண் ஒட்டகசிவிங்கியும் மரணம் அடைந்த விலங்குகள் ஆகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று உறவு இல்லாதவைகள் ஆகும்.

இவ்வாறு ஒட்டக சிவிங்கிகள் மின்னல் தாக்கி மரணம் அடைவது அரிதான ஒன்று என்பதால் இந்த மிருகங்களின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு மின்னல் தாக்கி மரணம் அடைந்தது உறுதி செய்யப்ப்ட்டுள்ளது. இரு விலங்குகளும் ஒரே மின்னலால் தாக்கப்பட்டதா அல்லது வேறு வேறு மின்னலா என்பது உறுதி செய்யப்படவில்லை.