திஸ்பூர்:

பாலியல் பலாத்கார குற்றவாளிகளை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பாஜக எம்.பி. ராம் பிரசாத் சர்மா தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநில ஆளுங்கட்சியான பாஜக.வை சேர்ந்த லோக்சபா எம்.பி. ராம் பிரசாத் சர்மா கூறுகையில்,‘‘ பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் நபர்களை பொது இடங்களில் மக்கள் மத்தியில் சுட்டு கொல்ல வேண்டும். இதற்கென்று ஒரு துப்பாக்கி சுடும் சிறப்பு படையை ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியன் குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு இது ஒன்று தான் வழி’’ என்றார்.

கவுகாத்தி உயர்நீதிமன்ற வக்கீலாக பணியாற்றிய இவர் அரசியலில இணைவதற்கு முன்பு பாலியல் குற்றங்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமே தீர்வை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக அஸ்ஸாமில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 5ம் வகுப்பு மாணவியை 4 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். இறப்பதற்கு முன்பு சிறுமி கூறிய தகவல்களின் படி 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அஸ்ஸாம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. இச்சம்பவங்களில் பங்களாதேஷ் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஈடுபடுவதாக எம்எல்ஏ.க்கள் மிரினால் சாயிகியா, சிலாதித்யா தேப் ஆகியோர் தெரிவித்தனர்.