திருவனந்தபுரம்: பிரபல ராப் பாடகர் மீது பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த பாலியல் வன்புணர்வு புகாரைத் தொடர்ந்து வேடன் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய காவல்துறை வலைவிசி தேடி வருகிறது. அவர் வெளிநாடு தம்பிச்செல்ல முடியாதவாறு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் ராப்பர் வேடன் வெளிநாடு தப்பிச் செல்லக்கூடும் என்ற அச்சம் எழுந்ததை அடுத்து, கேரள காவல்துறை அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. புகார் அளித்து இரண்டு வாரங்கள் ஆகியும் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வேடன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார், இது ஆகஸ்ட் 18 ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. நடந்து வரும் விசாரணையின் காரணமாக அவரது பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேடன் தலைமறைவாக உள்ளதால், அவரை கைது செய்ய கேரள காவல்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது.

பெண் மருத்துவர் ஒருவரிடம் பாலியல் சேட்டை செய்து அவரை கற்பழித்ததாக பெண் மருத்துவர் அளித்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என்ற தகவலின் அடிப்படையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
தனக்கு அபரிதமான ரசிகர்கள் ஆதரவு உள்ளது என செருக்கில் வேடன் பல்வேறு சட்டவிரோத செயல்களிலும், பாலியல் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக இவர்மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், பெண் மருத்துவர் கொடுத்த பாலியல் புகாரில் அவரை வேட்டையாட கேரள போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
ஹிரந்தாஸ் முரளி என்ற இயற்பெயரைக் கொண்ட வேடன் என்பவர் தனியாக ராப் ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ் என்ற முதல் இசை ஆல்பமே யூடிபில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சாதி மத அடக்குமுறைக்கு எதிராக தீப்பொறி போல இடம்பெற்று இருந்த பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு பாடல்களை வெளியிட்டு வந்த அவர் ரீல்ஸ்களில் அதிகமாக இடம் பெற்றார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஜோஜூ ஜார்ஜ், குஞ்சாகோ போபன் நடித்த நாயாட்டு என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிலும் அறிமுகமானார். தொடர்ந்து ‘நோ வே அவுட்’ திரைப்படத்தில் ‘மரணத்தின் நிறம்’ அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
இதற்கிடையே மலையாள மட்டுமல்லாது தமிழிலும் பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘குத்தந்திரம்’ பாடல் இவருக்கு பெரும் முகவரியை தந்தது. தொடர்ந்து நரி வேட்டை படத்திலும் வாடா வேடா பாடலை பாடி இருந்தார். இப்படி புரட்சிகர பாடல்கள் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமான ஹிரந்தாஸ் முரளி என்ற வேடன், சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். சர்ச்சைகள் மூலம் தன்னை பிரபலமாக்கி கொண்டவர்களில் இவரும் ஒருவர். இந்து மதம் உள்பட பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ள இவர்மீது ஏராளமான வழக்குகளும் பதிவாக உள்ளன,.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதன்முறையாக அவர் மீது பாலியல் புகார் முன்வைக்கப்பட்ட நிலையில் உண்மையில் தான் அவ்வாறு செய்ததாகவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறி இருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் கஞ்சா வைத்திருந்த புகாரில் கைது செய்யப்பட்ட வேடன் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அது மட்டுமல்லாது சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக வனத்துறை அதிகாரிகளாலும் கைது கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்து மதம் குறித்தும் பிரதமர் குறித்தும் அவமதிப்பதாக இவர் மீது பாஜகவினர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் வேடன். கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வைத்தார்.
வேடனின் பாடல்களுக்கு ரசிகையாக இருந்த அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும், பல நேரம் பணம் பெற்ற நிலையில் தன்னை ஏமாற்றி விட்டதாக அந்த பெண் புகார் அளித்திருந்தார்.
புகார் தொடர்பாக திரிஹரக்கா போலீசார் நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்காமல் இருக்க அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் கிடைத்ததாகவும், இதை அடுத்து இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வேடனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.