சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமார் காரை பரிசாக வென்றிருக்கிறார்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று அரங்கேறியது. பாரம்பரிய வீர விளையாட்டுக்காக டோக்கன் வழங்கப்பட்ட 700 காளைகளும், பதிவு செய்யப்பட்ட 921 காளையர்களும் காலை 7 மணி முதலே காத்திருந்தனர்.
காலை 7.30 மணிக்கே போட்டி தொடங்கியது. விழாக்குழு அறிவிப்புக்கு பின்னர் ஆட்சியர் வினய் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் அதனை ஏற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் டோக்கன் தரப்பட்ட காளைகள் அணிவகுத்தன. அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி திறமையை வெளிப்படுத்தினர்.
921 மாடுபிடி வீரர்கள், குழு குழுவாக களம் இறக்கப்பட்டனர். குழுவுக்கு 75 பேர் வீதம் வீரர்கள் என்ற விகிதத்தில் களம் இறங்கினர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசின.
வெற்றி பெற்றவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், அண்டாக்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் உடனுக்குடன் வழங்கப் பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் தரப்பட்டன.
போட்டியில் கடைசி சுற்றில் களமிறங்கிய மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஒரே சுற்றில் 16 காளைகள் பிடித்து அசத்தி உள்ளார் ரஞ்சித். இதற்காக கார் மற்றும் நான்கு பசு மாடுகளை பரிசாக வென்று சாதனை படைத்துள்ளார்.
14 காளைகளை அடக்கி 2வது இடம் பிடித்த கார்த்திக்கிற்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
13 காளைகளை தழுவிய கணேசனுக்கு 3வது பரிசு கிடைத்தது.
முதலிடம் பிடித்த ரஞ்சித்குமாரின் சகோதரர் ராம்குமார் கடந்தாண்டு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.