
புதுடெல்லி: சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவில் 238 பேர் மறைமுக தேர்தல் மூலமாகவும், 12 பேர் ஜனாதிபதியின் நியமனத்தின் மூலமும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டு ராஜ்யசபாவின் உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகாயை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். ராஜ்யசபாவில் 1 நியமன உறுப்பினரின் பதவி காலம் முடிவடைவதையடுத்து, அந்த இடத்துக்கு ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்று சில மாதங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தலைமையிலான அமர்வுதான் அயோத்தி வழக்கு தீர்ப்பை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் பரிந்துரையின் பேரிலேயே, குடியரசுத் தலைவர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களை நியமிக்கிறார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
[youtube-feed feed=1]