ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் ராணிப்பேட்டை தேர்தல் அதிகாரியுமான கிளாஸ்டன் புஸ்பராஜுக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டதிலிருந்து சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் செய்து வந்திருந்தார். கடந்த 6-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து வாலாஜாபேட்டை தனியார் கல்லூரியில் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டுப் பாதுகாப்பாக சீல் வைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்த அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை கரகரப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கொரொனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.மாவட்ட ஆட்சியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில், கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.