பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் மோதல் உருவாகியுள்ளது.
பா.ஜ.க.கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வானுக்கும், முதல்-அமைச்சர் நிதீஷ்குமாருக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த லோக்ஜனசக்தி கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை சிராக் வசம் ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் லோக்ஜனசக்தி நிறுவனரும்,மத்திய அமைச்சரும், சிராக்கின் தந்தையுமான ராம்விலாஸ் பஸ்வான்,’’ பீகார் மாநிலத்தில் கூட்டணி குறித்து என் மகன் சிராக் பஸ்வான் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்’’ என தெரிவித்துள்ளார்.
‘’ எனது மகன் சிராக்கின் இளம் சிந்தனைகள் பீகாரையும், கட்சியையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’’ என ட்விட்டர் பதிவில் பஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவால் ராம்விலாஸ் பஸ்வான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பா.பாரதி.