பஞ்சகுலா,
அரியானாவில் பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறைதண்டனை பெற்றுள்ள சாமியாரின் தினசரி வேலைகள் பற்றி சிறை அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
தேரா சச்சா அமைப்பின் தலைவரான ராம்ரஹிம் இரு பெண்களை பலாத்காரம் செய்ததற்காக 20 வருட சிறை தண்டனை பெற்றுள்ளார். தற்போது இவரை அரியானாவின் பஞ்சகுலா சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இவருக்கு கைதி எண் 8647 கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு Z+ பாதுகாப்புடன் இருந்த ராம்ரஹிம் தற்போது மூன்று ஆயுள்தண்டனை கைதிகளின் பாதுகாப்பில் இருக்கிறார்.
இது குறித்து சிறை அதிகாரி கே பி சிங், “ராம்ரஹீம் கொஞ்சம் கொஞ்சமாக சிறை வாழ்க்கையை பழகிக் கொடு வருகிறார். அவருக்கு கான்விக்ட் நைட் வாட்ச்மேன் எனப்படும் ஆயுள் தண்டனை கைதிகளில் மூவரால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறை அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். எப்பொழுதும் இவர்கள் சாமியாருடனேயே உள்ளனர்.
முதலில் கொஞ்சம் அடம் பிடித்து வந்த பலாத்கார சாமியார் தற்போது மிகவும் கீழ்படிதலுடன் நடந்து வருகிறார். கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, தனக்கு கொடுக்கப்பட்ட தோட்ட வேலையை செய்து வருகிறார். ஐந்து மணி நேர தோட்ட வேலைக்குப் பிறகு அவர் பகவத்கீதையை படித்து வருகிறார். தினமும் காலையில் இரண்டு ரொட்டித் துண்டுகளும் பாலும் அருந்திய பின் தோட்டவேலையை துவங்கி விடுகிறார்.
மதிய உணவாக 7 சப்பாத்திகளும், காய்கறியும் தறப்பட்டு வருகின்றது. இரவில் காய்கறிக்கு பதிலாக பருப்புக் குழம்பு தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காய்கறி சமைக்கப்பட்டு தரப்படுகிறது. அது தவிர அவருக்கு ரூ.5000 வீட்டில் இருந்து சாப்ப்பட்டுக்கு தரப்படுகிறது. அதைக் கொண்டு அவர் சிறையில் உள்ள விடுதியில் பழங்கள் வாங்கி உண்கிறார்.
அவருக்கு வெள்ளை பைஜாமாவும் குர்தாவும் தரப்பட்டுள்ளது. செய்தித்தாள்கள் தரப்பட வில்லை. தினமும் குடும்பத்தினருடன் ஐந்து நிமிடங்கள் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாமியார் கொடுத்த இரு நம்பர்களில் ஒன்று அவருடைய வளர்ப்பு மகள் என சொல்லப்படும் ஹனிப்ரீத் நம்பர் ஆகும். அவர் இப்போது தலைமறைவாக இருப்பதால் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று அவருடைய சொந்த நம்பர். அதை சாமியார் யாரிடம் கொடுத்துள்ளார் என தெரியவில்லை. அந்த எண்ணும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக தகவல் வருகிறது.” என கூறியுள்ளார்.