“நான் எங்கிருக்கேன்?” – மயக்கத்திலிருந்து தெளிந்த ஹீரோயின் கேட்பதை பல படங்களில் பார்த்திருப்பீர்கள்.
இதே நிலை மது போதைியலும் உண்டு. இரவு குடித்த நபர், மறு நாள் காலையில்… “எங்கே குடிச்சோம்.. எப்படி வீட்டுக்கு வந்தோம்…” என்று யோசிப்பார்… நினைவுக்கு வராது.
இதுதான் பிளாக் அவுட்.
எதுவுமே தெரியாமல், புரியாமல் எப்படி சரியாக வீட்டுக்கு வருகிறார், குடித்தவர்?
நம் வீடு, நாம் செல்லும் வழி போன்றவை நமது மூளையில் பதிவாகிறது. பிளாக் அவுட் நேரத்தில் ஏற்கெனவே பதிவானபடி சென்றுவிடுகிறோம். ஆனால் எப்படி நடந்தோம், யாருடன் பேசினோம், சண்டையிட்டோம் என்பதெல்லாம் தெரியாது.
போதையில் நண்பரை அடித்துவிட்டு, மறுநாள் எந்தவித குறுகுறுப்பும் இல்லாமல் அவருடன் ஒரு குடிகாரரால் பேச முடிவது இப்படித்தான்.
குறைந்த நேரத்தில் அதிகமாகக் குடிப்பதாலோ… நெடுநாள் குடிக்காமல் இருந்து மீண்டும் குடிப்பதாலோ இந்த பிளாக் அவுட் ஏற்படும். ( அதற்காக தினமும் குடிக்கணும் என்பது அர்த்தமல்ல.)
இந்த பிளாக் அவுட் நேரத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது. இதுதான் மிகப்பெரிய ஆபத்து. தனக்குத் தோன்றியதை எல்லாம் பிளாக்அவுட் ஆசாமி பேச… எதிரே இருக்கும் ந(ண்)பர், “ஓ…இதெல்லாம் மனசுல வச்சிருக்கானா.. இப்பதான் தெரியுது…காலி பண்ண வேண்டியதுதான் இவனை!” என்று நினைப்பார்.
பேசிய நபருக்கோ மறுநாள் காலையில் எதுவுமே நினைவில் இருக்காது. மீண்டும் மது அருந்தும்போதுதான் முந்தைய போதையில் பேசியது நினைவுக்கு வரும்
இதுபோன்ற பேச்சுக்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றாலும், பிறருக்கு தொந்தரவாக இருக்கும்போது அதை அனுமதிப்பார்களா?
இப்படித் தன்னைத்தானே பிளாக் அவுட் செய்துகொள்ளும் மூடத்தனமான மது போதையை விட்டு விலகுவதே சரி.
இந்த பிளாக் அவுட் குறித்து மனநலமருத்துவரும், குடி மீட்பு மருத்துவருமான சுப்பிரமணியன் அவர்களிடம் கேட்டேன். அவர் சொன்னது :
“குடிப்பழக்கம் ஒரு நோய் என்பதை மருத்துவம் நிரூபித்திருக்கிறது. ஆனால் குடியாளர்களை யாரும் நோயாளியாகப் பார்ப்பதில்லை. “திமிரெடுத்துக் குடிக்கிறான்” என்றே எண்ணுவார்கள். ஆகவே குடியாளருக்கு சிகிச்சை எவ்வளவு அவசியமோ…அதே போல அவரது குடும்பத்தினர், ஒரு நோயாளியைப்போல அவரை அணுகினால் விரைவில் குடிநோயிலிருந்து வெளிக்கொணரலாம்.”
(பின் குறிப்பு: பிளாக் அவுட் ஏற்பட்டு, பொது இடத்தில் ரகளை செய்பவர் படங்களாக இருக்கின்றனவே.. பெண்களுக்கு மட்டும்தான் பிளாக் அவுட் ஏற்படுமா என்று கேட்காதீர்கள். ஆண், பெண், திருநங்கை என்று மூன்று பாலினத்தவருக்கும் பிளாக் அவுட் ஏற்படும். குடிக்கும் ஆளைப் பொறுத்ததல்ல.. அளவைப்பொறுத்தது அது.
இன்னொரு விசயம்.. தஞ்சை, திண்டுக்கல், நாகை, பரமத்தி வேலூர் ஆகிய ஊர்களில் மட்டும்தான் குடித்துவிட்டு பிளாக் அவுட் ஏற்பட்டு பெண்கள் ரகளை செய்தார்கள் என்று நினைக்க வேண்டும். டில்லி போன்ற பிற மாநிலங்களிலும் இப்படி நடப்பது உண்டுதான். அந்த படங்கள் கிடைக்கவில்லை!)