ராமேஸ்வரம்: கொரோனா தளர்வுகள் காரணமாக அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்ட நிலையில், ராமேசுவரம் கோவில் மற்றும் அங்குள்ள  தீர்த்த கிணறுகள் இன்னும் திறக்கப்படாத சோகம் தொடர்கிறது.  116 நாட்களை கடந்தும்  இன்றும் கோவிலின் தீர்த்த கிணறுகள் திறக்க  அனுமதி அளிக்காத மாநில அரசின் நடவடிக்கை பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, மாநிலம் முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூட தமிழகஅரசு உத்தரவிட்டது. பின்னர் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் கொரோனா நெறிமுறைகளுடன் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கியது. ஆனால், வெள்ளி, சனி, ஞாயிறு முக்கிய வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோவிலில் இன்னும் தீர்த்த கிணறுகள் திறக்க திமுக அரசு அனுமதி வழங்கவில்லை. பக்தர்களின் பாவம் போக்கும் ஸ்தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடை இன்னும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.  ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் கோவிலில் உள்ள 22 தீர்த்தகிணறுகளிலும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு தீர்த்த கிணறுகள் மூடப்பட்டன.  இதுவரையிலும் திறக்கப்படவில்லை.

தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவழித்துவரும்  ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், பெரும் சோகம் அடைந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுமட்டுமின்றி இந்த தீர்த்த கிணறுகளையே நம்பி பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் 450-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகஅரசு இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து,   ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளை திறந்து பக்தர்கள் நீராட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்களும்  பணியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.