பெங்களூரு: பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் குண்டு வைத்த நபர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்து உள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த வாரம் வெடிகுண்டு வெடித்ததில் ஒரு பெண் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதையொட்டி அமைக்கப்பட்ட தனிப்படை மற்றும் என்ஐஏ விசாரணையில் 5 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்தவர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதிக்கு ஐஎஸ்ஐஎஸ் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டு வைத்தவர் கைரேகள் இதுவரை கிடைக்கவில்லை. சிசிடிவி இல்லாத இடங்களில் சுற்றித் திரிந்த அவர், ஓட்டலில் சிங்க் அருகே வெடிகுண்டு பையை வைத்திருந்தார். அவர் செல்போன் பயன்படுத்தாததுடன், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியதால், நன்கு பயிற்சி பெற்றவர் என்றும், போதிய தகவல்களைச் சேகரித்து முன் திட்டத்துடன்குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளார் என்றும் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் குண்டுவெடிப்புக்கு மர்ம நபர்கள் அம்மோனியம் நைட்ரேட் பவுடரை பயன்படுத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மோனியம் நைட்ரேட் பொது விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் குவாரிகளில் பாறைகளை வெடிக்கப் பயன்படுகிறது.
ஏற்கனவே மங்களூரு மற்றும் ஷிமோகா சம்பவங்களில், குண்டுவெடிப்பின் போது கந்தக தூள் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது. எனவே, கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களில் அம்மோனியம் நைட்ரேட் சப்ளை செய்தவர்கள் குறித்து என்ஐஏ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக, பெங்களூரு ஒயிட் பீல்ட் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில். ப்ரூக் பீல்ட் பகுதியில் சாலையில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றித் திரிந்த நபரை சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதன் மூலம் கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபருக்கு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
முக கவசம், தொப்பு அணிந்து சென்ற நபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி காடியிலும் கையில் பையுடன் வரும் மர்ம நபர் சிறிது நேரத்திற்கு பின்னர் வெறுங்கையுடன் செல்வது போன்று பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், என்ஐஏ அதிகாரிகளும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய வர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.