மதுரை: மதுரையில் ராமர்கோவில் நிதி வசூல் தொடர்பாக ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு, மதுரை மாவட்ட காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நாடு முழுவதும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இந்த நிலையில், மதுரையில் ராமர்கோவில் நிதி திரட்டும் வகையில் ரத யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்காக காவல்துறையின் அனுமதி கோரப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். அவரது மனுவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டும் பணிக்காக உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடம் எங்கள் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்படுகிறது. அதுபோல, மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் ராமர் கோயிலுக்கு நிதி வசூலிக்க பிப். 27 வரை ராமன், சீதாதேவி, ஆஞ்நேயர் விக்ரகங்களுடன் ரத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதற்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் பிப். 13-ல் மனு அளித்தோம். இந்நிலையில் ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து திலகர் திடல் காவல் உதவி ஆணையர் பிப். 18-ல் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கொரோனா நோய் பரவலால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம். எனவே ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து திலகர் திடல் துணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, மதுரையில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ரத யாத்திரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரையில் 100 வார்டுகளில் ரத யாத்திரை நடத்தவும், அதேசமயம் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் கூட்டம் கூடுதலை தவிர்த்தல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு அனுமதி வழங்கினர்.