சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பார் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்து வருகிறது.  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாமக தரப்பில், அதிமுகவிடம் இடஒதுக்கீடு கேட்டு முரண்டுபிடித்து வந்தது.  அதை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று, அரசு வேலையில் பாமகவுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றினார். இதனால் காரணமாக அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  அதிமுக – பாமக கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் இன்று அறிவிப்பார் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,  ராமதாஸ்  பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. பாமக நிறுவனரும், அவரது தந்தையுமான மருத்துவர் ராமதாசுடன் பேசிய அவர், 40 ஆண்டு கால போராட்டம் வெற்றி பெற்றதாக கண்ணீர் மல்க கூறினார்.

தமிழக அரசின் இடஒதுக்கீடு அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது 40 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார். மேலும், அதிமுக கூட்டணியில் பாமக உறுதியாக இருப்பதாகவும், அதிமுகவுடன் இன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.