விழுப்புரம்

நேற்றைய பாமக பொதுக்குழுவில் ஏற்பட்ட ராமதாஸ் – அன்புமணி கருத்து மோதல் சுமுகமான முடிவை எட்டி உள்ளது.

நேற்று புதுவையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது கட்சியின் இளைஞரணி தலைவராக ராமதாஸின் பேரன் முகுந்தனை நியமனம் செய்வது தொடர்பாக ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது., கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமிக்க, அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ராமதாஸ் அப்போது,

“இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும். கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள்”

எனக் கூறினார்.

டாக்டர் அன்புமணி ஆத்திரம் அடைந்து, தான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளதாகவும். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து தைன்னை சந்திக்கலாம் என்றும் ஆவேசமாக கூறி விட்டு மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.

ஒரே மேடையில் ராமதாசும், அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ’கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையொட்டி அன்புமணி, செய்தியாளர்களிடம்,

“பா.ம.க. ஒரு ஜனநாயக கட்சி. கட்சி பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான். ஐயா எப்போதும் எங்களுக்கு ஐயாதான். பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து மற்றவர்கள் பேசக்கூடாது. கட்சியின் வளர்ச்சி, சட்டமன்றத் தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து பேசினோம்.”

என்று கூறி உள்ளார்.